வேருக்கு நீரில்லாப் பருவத்தில்
கருகாமல் உயிர் பெருக்க
தருவெல்லாம் பசிபொறுத்து
இரவெல்லாம் காத்திருக்க...
வாழ்வளிக்க வானிலிருந்து
துகள்துகளாய் தவழ்ந்திறங்கி
துளியாய் ஒன்றாகி உருவாகி
இலைகளைத் தொட்டவுடன் தங்கி
தலைவழி உணவாகியது போக
மீதமிருந்தது தேங்கி இருந்தது
புல்லின் நுனியின் முனையிலும்....
தாமரையின் இலையின் நடுவிலும்....
கிரீடம் கிடைத்த கர்வத்தில்
புல்தன் நிலையில் நிமிர்ந்திருக்க...
தன்னிலைதான் பெருமையென்று
தாமரை இலையும் மிதந்திருக்க...
புல்லின் கர்வத்தைத்
தட்டிப் பறித்திட
காற்றும் திட்டமிட...
இலையைக் கவிழ்க்கும்
அலையை எழுப்ப
கலங்கிய குளமும் முயல...
நடப்புகளைக் கவனித்தபடி
நிகழ்வுகளைக் கணித்தபடி
வெற்றிச் சிரிப்பூடன்
ஏற்கனவே பனித்துளியை
பருகத் தொடங்கி இருந்தான்
அதிகாலைச் சூரியன்......
[ நன்றி :பாலாஜி ராமானுஜம்,தேசிங்கு ராஜா/ அண்ணாமலை]
No comments:
Post a Comment