Wednesday, June 3, 2009

ரெண்டு தடவ கரண்டு போகணும் சாமி...


கரண்டு எப்போ போவும்..........?
--------------------------------

என் வீட்டுக் கூடத்துல
என்னென்னெவோ நடக்குது
நட்ட நடுவீடு இப்போ
நாசமாகிப்போய்க் கெடக்குது

"விடிஞ்சும் விடியாதப்பவே ஒருத்தன்
விபூதித் தட்டோட வாறான்!
கடவுளே இல்லேன்னு அடுத்தவன்
கத்திக்கிட்டே போறான்!!

மாமியாரும் மருமகளும்
மோதிக்கிட்டே இருக்காங்க !
மருமகனும் மச்சினரும்
மொறச்சிக்கிட்டேத் திறியறாங்க !!

வரதட்சணயக் கேட்டு
வந்தவள உருட்டுறாங்க !
வந்த எடத்துல பெரியவங்கள
வாய்க்குவந்தபடி மெரட்டுறாங்க !!

பெருசுகள சத்தமில்லாம வெளியேத்த
பெருசா பாதபோட்டுத் தாராங்க !
சொத்த மொத்தமா சேத்துப்புடுங்க
திட்டம் போட்டுப் போறாங்க !!

அரகொறயா சுத்துறானுங்க !
அவுத்துப்போட்டு அளைறாளுங்க !!
நாலுபேரா சேந்து புகைப்பிடிக்காங்க !!!
நடுவீட்டுல வந்து தண்ணியடிக்காங்க !!!!

களவாணிபயலுவ ஒண்ணா சேந்து
கொள்ளை அடிக்க வாறான் !
கொலைகாரன் பயமே இல்லாம
கொன்னு போட்டுட்டு போறான் !!

வாய மூடியேப் பேசச் சொல்லுதான் !
வார்த்தய சாச்சி எழுதச் சொல்லுதான் !!
செங்கலவச்சு சாதகமும் சொல்லுதான் !!!
செவப்புக்கல்லு பாதகமுன்னு சொல்லுதான்!!!!"

கண்டவங்களயும் பாத்துக்கிட்டே
கஞ்சி தண்ணிக்கூட தரமாட்டாங்க
டீவிப்பொட்டி அதுவா அணஞ்சாத்தான்
பாவி என்னயக்கொஞ்சமாவது கவனிப்பாங்க

திண்ணயில இருக்கிற எனக்கு
தெனமும் இதே ரோதணைதான்
கரண்டு எப்போ போகுமுன்னு
கடவுள வேண்டிக்கிட்டே இருப்பேன்

அந்த நூத்திசொச்ச நிமிசம்
அதுதான் எனக்கிங்கே சொருக்கம் !

" 'ஏஞ்சாமி' உங்கிட்டதான்
எனக்காக அந்த வரம் கேக்கேன் !
சொருக்கம் ரெண்டுமொற வந்துபோக
சுறுக்கா ஒருவழி செய்ய மாட்டீயா ?"

Monday, June 1, 2009

கொஞ்சம் திரும்பிப்பார் 26/11


அந்நிய மண்ணில் திட்டமிட்டு
இந்தியாவை திடுக்கிட வைத்து
தீவிரவாதிகள் நடத்தி முடித்த
அதிதீவிரவாதத் தாக்குதல் அது

உயர் அதிகாரிகளை வரவழைத்து
உயிர்பறித்த தாக்குதல் அது
அப்பாவிப் பொதுமக்கள் மீதான
அடாவடி வெறித்தாக்குதல் அது

இதுவரை இந்தியா சந்தித்ததில்லை
இது போன்றதொரு தாக்குதலை

உலகமும் இதுவரை பார்த்திருக்கமுடியாது
இனி நடக்கப் போகும் வேடிக்கையை

கதாநாயகன்
கசாப்பை கூண்டிலடைத்து
வெற்றிகரமாய் தாண்டிவிட்டது
200 நாட்கள் மொத்தமாய்

200 உயிர்களை மொத்தமாய் இழந்தோம்
2000 வாழ்க்கை முழுமையாய் கேள்வியானது
100 கோடி மனம் தவித்துப்போய் நின்றது

கண்ணால் பார்த்த சாட்சிகள் உண்டு
காணொளித் தடயங்கள் உண்டு
களத்திலிருந்து உயிர்கொடுத்து
கைதுசெய்த காவலர்கள் உண்டு

உடனடி நீதிதான் 'அவர்களுக்கு'
உறுதியான செய்தி கொண்டு சேர்க்கும்
தாமதமாகும் தீர்ப்புகள் எல்லாம்
மறுக்கப்பட நீதிக்கு சமமாகிவிடும்

ஆனால் இங்கே நிகழ்வதென்ன ?

அங்கிருந்து 30 கேள்வி கேட்க்கிறார்கள் !
இங்கிருந்து 28 பதில் சொல்கிறார்கள் !!

தாக்கியவன் கேள்விகளை
தெனாவெட்டாய்க் கேட்க்கிறான்
அடிபட்டவன் பதில்களை
அடக்கமாய் சொல்லிகொண்டிருக்கிறான்

அதோ நீதிக்காக அவர்களும்
இதோ நீதிகாக்க இவர்களும்
இந்திய சட்டப் பிரிவுகளோடு
இங்கே தயாராக இருக்கிறார்கள்

நீதி மன்றக்காட்சிகள் இனி
தேதி தவறாமல் நடந்தேரும்
திட்டம் போட்டுத் தடுத்தாலும்
தலைமுறை பல கடந்தாலும்
சட்டம் கடமையை செய்தேதீரும்

ஆரம்பமாகிவிட்டது !

வக்கீல் அவனுக்காக
வாதாட வந்திருக்கிறார்
காப்பாற்றுவேன் கசாப்பை என்கிறார்
காப்பேன் தொழில்தர்மம் என்கிறார்

அவனைப் பச்சைக் குழந்தை என்கிறார்
பால்குடி மறக்கவில்லை என்கிறார்
வயதுக்கு வரவில்லை என்கிறார்

இந்தியாவின் நீதிமுறை பற்றியும்
இங்கேயுள்ள நடைமுறை பற்றியும்
அத்தனையும் முழுமையாக
அவனுக்குத் தெரிந்திருக்கிறது

இப்போதுதான் அவனும் ஆரம்பித்திருக்கிறான்

நான் சின்னப்பையன் என்கிறான்
சிறுவர் நீதிமன்றம் வேண்டும் என்கிறான்
குற்றப் பத்திரிக்கை முழுவதும்
பெற்றவள் மொழியில் வேண்டும் என்கிறான்

இனிமேல்தான் இன்னும் தொடருவான்

உள்ளே இருந்தே சட்டம் படிப்பான்
உடல் நலம் காட்டி மருத்துவமனை சேர்வான்
குளிர்சாதன வசதி கேட்ப்பான்
குளிக்க பன்னீர் கேட்ப்பான்

நீதிபதியை மாற்றச் சொல்வான்
அதிபரிடம் பேச அனுமதி கேட்ப்பான்
கருணைமனு கோரிக்கை வைப்பான்
காலம் கடந்துவிட்டதென நீதியும் கேட்ப்பான்

விலக்குகள் கேட்டுக்கொண்டே இருப்பான்
விளக்கங்கள் தந்துகொண்டே இருப்பார்கள்
வழககும் நடந்துகொண்டேதான் இருக்கும்

அதற்குள்
அடுத்த உலகக்கோப்பை தொடங்கி இருக்கும்
அடுத்த தேர்தல்வசூல் ஆரம்பமாகி இருக்கும்
அடுத்தடுத்து நாமும் பரபரப்பாகி இருப்போம்

வாழ்க சனநாயகம் !
வாழ்க் வாழ்க சனஞாபகம் !!
வாழ்க வாழ்க வாழ்க சனநாயகம் !
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க சனஞாபகம் !!

நண்பனா?, காதலனா??,,,,,


அம்மன்கோவில் அழகுச் சிலைபோல
அங்கேதான் அவள் நிற்கிறாள்
அதேகோவில் பலியாடு போல
அவள்முன் நான் நிற்கிறேன்

இருவருடத்தின் நட்பை அவளிடம்
ஒருநிமிடத்தில் காதலாய்ச் சொல்லி

பின்விளைவுகள் தெரியாமல்
தன்னிலை குலைந்து நிற்கிறேன்

சிறுத்த தையின் கண்களில்
சிறுத்தையின் சினம் காண்கிறேன்
வெண்புறா முகம் அதனில்
வண்புலியின் வேகம் பார்க்கிறேன்

வடிவு அவள் சொல்லப்போகும்
முடிவு மெள்ளக் காத்திருக்கிறேன்
கோதையவள் வாய் திறந்தவுடன்
கோடையிடி இறங்கப்போகிறது என்மேல்

"திறந்த என்மனம் புரிந்தறியும்
திறம் இல்லையா உனக்கு !
இதை என்னிடம் வந்துசொல்ல
இத்தனை நாளானதா மக்கு ?"


மெதுவாய்ச் சொல்லிவிட்டு
மெல்லத் திரும்பி நடக்கிறாள்
பயத்தில் காதடைதிருந்த எனக்கவளின்
வாயசைந்தது மட்டும்தான் தெரிந்தது

அய்யோ.............!

என்னவோ சொன்னாளே அவள் ?
ஏன்மிக மெதுவாக நடக்கிறாள் ??
ஏன்திரும்பித் திரும்பிப் பார்க்கிறாள் !
எதுவோ என்னிடம் எதிர்பார்க்கிறாள் ?!

தெரிந்த சேதி ஏதுமுண்டா உங்களிடம் ??
அறிவிக்க இயலுமா உடன் என்னிடம் ???

Friday, May 29, 2009

அயலகத்தில்,குழப்பத்தில் நான்.......



வெள்ளைத் தலையோடு
துள்ளிவரும் குமரிகள் !
வெண்ணையாய் வழுக்கிவரும்
வெண்பஞ்சு வாகனங்கள் !!
அயலகம் என்பது தானா
பூலோகத்தின் நடமாடும் சொர்க்கம் !!!

ஆயிரம் பேருக்கு இடையே
அந்நிய நாட்டவன் எனக்கு
அலுவலத்தில் பதவிஉயர்வு

அயராத உழைப்பிற்கும்
தளராத கட்டுப்பாட்டிற்கும்
கடவுள் தந்தபரிசு தானிது

ஐந்து நட்சத்திர உணவகம்
அனைத்து நண்பர்களுக்கும்
அலுவலகத் தோழர்களுக்கும்
ஆரம்பமானது ஆர்ப்பாட்ட விருந்து

மிகுதியான மனநிறைவையும்
வசதியான பணயிருப்பையும்
நண்பர்களிடம் நான் காட்ட
நல்ல தருணம் தான் இது

எதிர்பாராத வேளையில் திடீரென
எனது தட்டின் உள்ளிருந்து
முள் கரண்டிமுனையில் சிக்கி
கையில் வந்த கறுப்புமுடி
கவனத்தைக் கலங்கவைக்கிறது
சிந்தையைச் சிதறவைக்கிறது

எனதுயர் கோபமறிந்த
எனதுயிர் நண்பர்கள்
நிகழப்போவதை நினைத்து
திகைத்துப்போய் நிற்கிறார்கள்

நானோ எனக்குள் நூறுகூறாய்
நொறுங்கிக் கொண்டிருக்கிறேன்
எனைச்சுற்றி நிகழ்வதை மறந்து
எதற்குள்ளோ மூழ்கிக்கொண்டிருக்கிறேன்

முள்கரண்டியும் கறுப்புமயிரும் கூடி
முள்தூண்டிலும் நரம்புமாய் மாறி
ஆழ்மனதுக்குள் நங்கூரமாய் இறங்கி
ஆழப்பதிந்து நகர மறுக்கிறது

கறுங்கூந்தல் கடலில் நாளெல்லாம்
கண்மூடி மூழ்கிக்கிடந்த நினைவுகளை
கண்டம் கடந்து இழுத்து வருகிறது
கடந்த கனவுகளைக் கடத்தி வருகிறது

மனதுக்குள் வெளிறி
மெதுவாய் எழுந்து
மெல்ல வெளியேறி
மவுனமாய் நடக்கிறேன்

கோழியின் சிறகனைப்பில் சின்னக்குஞ்சுகள்
குஞ்சுகளுக்கு இரையூட்டும் சிட்டுக்குருவி
குட்டிகளோடு அலையும் வீட்டுப்பூனை
கூடி அலையும் அன்னப்பறவை
கூட்டமாய்த் திரியும் அண்டங்காக்கை

எதைப் பார்த்தாலும் எனக்குள்
என்னென்னவோ செய்கிறது மனதுக்குள்

என்ன ஆயிற்று எனக்கு??
என்ன செய்ய வேண்டும் நான்???

Thursday, May 28, 2009

காரணம் அவள்தான்..!


என்னிடம்
அதிகம் பேசுவாள்
ஆர்ப்பாட்டம் செய்வாள்

எடுத்தெறிந்து ஏசுவாள்
எதுசொன்னாலும் மீறுவாள்

வாயாடி எதிர்த்துநிற்பாள்
வாய்நிறைய பொய்யும்சொல்லுவாள்

தனக்கெல்லாம் தெரியுமென்பாள்
தான்சொன்னதுதான் சரியென்பாள்

ஆகையால் நான்
அவளால் பைத்தியமாய் இருக்கிறேன்


சாலையில்
தலைக்கவசம் இல்லாமல்
தலைதெறிக்கும் வேகம் காட்டுவாள்

அலைபேசியில் பேசிக்கொண்டே
அலட்சியமாய் வாகனம் ஓட்டுவாள்

தவறு முன்னால்நடந்தால்
தைரியமாய்த் தட்டிக்கேட்ப்பாள்

மாற்றுக் கருத்து எதையும்
ஏற்றுக்கொள்ளவும் மாட்டாள்

சுற்றத்தோரின் பேச்சை எல்லாம்
சற்றும் சட்டை செய்யமாட்டாள்

ஆகையால் நான்
அவளால் பைத்தியமாய் இருக்கிறேன்


இதைச் செய்யாதே என்றால்
அதைத்தான் முதலில் செய்வாள்

தனக்குத் தோன்றியதை
தவறென்றாலும் செய்து முடிப்பாள்

இப்படித்தான் இருக்கவேண்டுமென்றால்
இப்படியும் இருக்கலாம் என்பாள்


ஆகையால் நான்
அவளால் பைத்தியமாய் இருக்கிறேன்

ஆம் நான்
அவள்மேல் பைத்தியமாய் இருக்கிறேன்

Tuesday, May 26, 2009

இது உனக்கொரு (எனக்கும்) எச்சரிக்கை ...!


உறவாடிக் கெடுப்பவர்கள்
உன்னைச் சுற்றியே இருப்பார்கள்
உள்ளொன்று வைத்திருப்பார்கள்
உனக்காக உயிர்தருவதாய் நடிப்பார்கள்

குழி வெட்டிக் காத்திருப்பார்கள் - நீ
ஓய்வெடுக்க என்பார்கள்

வலை விரித்து காத்திருப்பார்கள் - நீ
தங்கிச் செல்ல என்பார்கள்

தூண்டிலிட்டுக் காத்திருப்பார்கள் - நீ
ஊஞ்சலாட என்பார்கள்

தடை உருவாக்கிக் காத்திருப்பார்கள் - நீ
நடை பயில என்பாகள்


தேரதை இழுத்து நடுத்
தெருவினிலில் விடுத்து அதை
வேடிக்கை பார்ப்பதையே தன்
வாடிக்கையாய்க் கொண்டோர் இவர்

கொஞ்சிக் கொஞ்சிப் பேசும்
வஞ்சகரின் வாய்ப் பேச்சில்
வழுக்கி விழுந்து விடாதே
வாழ்க்கை இழந்து விடாதே

நல்லோரை அவர் தம்
நடத்தையால் தெரிந்துகொள்
உண்மையை உனது உள்
உணர்வால் புரிந்துகொள்

வஞ்சினம் கொண்டு நீ
வஞ்சகம் கொன்று நீ
வாழ்க்கையில் வென்று நீ
வழிகாட்டியாய் நின்று விடு

Thursday, May 21, 2009

அம்பும் வில்லும் எதிரெதிராய்....!?






பதுங்க நேரம்தராமல்
பாதுகாக்க தடம்விடாமல்
எதிர்பாராத நேரத்தில்
எதிரிகளின் தாக்குதல்

திடீரென வானிலிருந்து பொழியும்
தொடர் மழை அம்புகள்
தரையைத் தாக்கும் வேகத்தில்
நிலை குலைய வைக்கின்றன

எதிர் கணைகளைத் தொடுக்க
ஏழு வண்ணங்களில் எட்டு திக்குமாய்
வான்நோக்கி விரிந்து இருக்கும்
வானவில்லை எடுத்து நிறுத்துகி்றோம்

வில்லைப் பார்த்தவுடன்
விலகி ஓடுகின்றனர் எதிரிகள்
அம்புகளின் தாக்குதலும்
அப்படியே நின்று போகிறது

ஏவலாய்ப் பாய்ந்துவரும் அம்புகள்
எதிர்பார்க்காமல் எதிரியாய் அங்கே
எதிரே வில்லைப் பார்த்தவுடன்
விதிர்த்துப்போய் மலைத்து நிற்கிறது

வெஞ்சினத்தோடு பாய்ந்து வந்தவை
பூஞ்சாரலாகி சாமரம் வீசுகிறது
வில்லிருக்கும் வரை நமக்கு
வெற்றியின் துணை இருக்கும்

Monday, May 18, 2009

உதயசூரியன் கொண்டுவரும் சேதி..!


அதிகாலைச் சூரியனின்
அற்புத தரிசனத்திற்காக
கிழக்குக்கடற்கரை மணல்வெளியில்
கீழ்திசைநோக்கிக் காத்திருக்கிறேன்

குருதிப்புனலில் முகிழ்கும்
இறுதி நீர்க்குமிழ்போல
மெல்ல வெளிவரும்
காலைக் கதிரவனின்
சென்நிற கிரகணக்கரங்கள்
காத்திருக்கும் என்னிடம்
மொத்தமாய் அள்ளிக்
கொண்டுவந்து சேர்க்கின்றன

உணவில்லா வயிற்றின் ஓலத்தையும்
மருந்தில்லா காயத்தின் ஒப்பாரியையும்
உறுப்பிழந்த உடல்களின் கதறலையும்
உறவிழந்த உள்ளங்களின் உளரலையும்

ஒழுகும் குருதியின் ஓசையையும்
அழுகும் பிணங்களின் வாடையையும்
அழுதோய்ந்த குழந்தைகளின் விசும்பலையும்
கருகிமடிந்த காவல்தெய்வங்களின் சாம்பலையும்


அரைமணி பயணக் கீழ்திசையில்
அத்தனையும் அப்படியே தலைகீழாய் !
எனக்கான அதிகாலை போல
எப்போதங்கே விடியல் வரும் !!

அதிகாலை உதய சூரியனே !

அதிகாரம் படைத்தோரின்
குளிர்சாதன அறைக்குள் சென்று
தயங்குவோருக்கு உண்மை உணர்த்த
தூங்கும் உணர்வுகளை தட்டியெழுப்ப

உன்னால் மட்டுமே
உடனே முடியும் !

உன்னால் உயர்ந்தோரை
உன்சொல் கேட்கவைக்க

உன்னால் மட்டுமே
உடனே முடியும் !!

யுத்தமில்லாமல் பூமிகாக்க
ரத்தமில்லாமல் தேசம்பார்க்க

உன்னால் மட்டுமே
உடனே முடியும் !!!

Saturday, May 16, 2009

நான் ஏற்கனவே செயித்துவிட்டேன்....!!!


ஓட்டு எண்ணும் முன்னரே
ஒருதுளி சந்தேகமின்றி
எனதுதொகுதித் தேர்தலில்
ஏற்கனவே செயித்துவிட்டேன்

சனநாயகத்தில் மக்கள்தாம்
முடிவுக்காகக் காத்திக்கவேண்டும்
பணநாயகத்தில் வீட்டு வாசலில்
முடிவு எனக்காகக் காத்திருக்கும்

எனது கட்சிக்காரருக்கும்
எதிர் கட்சிக்காரருக்கும்
என்கணக்கில் பாதியும்
காந்திகணக்கில் மீதியுமாய்
தேர்தல்நிதியாய்ப் பணத்தை
தண்ணீராய் இறைத்திருக்கிறேன்

எனது பணத்துடன்
எனது பணம் மோதி
எனது பணம் செயித்து
என்னையும் செயிக்கவைக்கும்
எட்டாவது அதிசயமிதை
எங்கேனும் கண்டதுண்டா !

எவர் செயித்தாலும் கிரீடம்
என்தலைக்கு வந்து சேரும் !!

செயிக்கும் அணியிலேயே இருந்தவன்
செயிக்கும் அணியில்தான் இருக்கிறேன்
செயிக்கும் அணியில்தான் இருப்பேன் !!!

Friday, May 15, 2009

இந்த IPL அறிந்துகொள்ளுங்கள்...!


அகிலத்தின் மொத்த கவனமும்
குவிந்திருக்கிறது அங்கே

பட்டினியாக் கிடக்கும் நாடு
பலஆயிரம் கோடி செலவில
பலநாடுகளிடம் கடன் வாங்கி
பகட்டுக்காக நடத்தி வரும்
பரபரப்பான ஆட்டம் அது

நடுமைதானத்தில் இவர்கள்
நாற்புறமும் சுற்றி அவர்கள்

எளியோர் இவர்களை ஆட்டமிழக்க வைக்க
வலியோர் அவர்கள் தயாராயிருக்கிறார்கள்


அவர்கள்

ஆயத்தமாய்த் தாக்குதல் நடத்த
சூழ்ந்து நிற்கிறார்கள்

அடிக்கடிக் கூடிப்பேசி பல
திட்டம் தீட்டுகிறார்கள்

எல்லையைத் தாண்ட விடாமல்
தடுத்துப் பிடிக்கிறார்கள்

ஆனவமாய்ப் பேசிப் பார்க்கிறார்கள்
ஆவேசமாய் வீசித் தாக்குகிறார்கள்
ஓடவிடாமல் தடை செய்கிறார்கள்


இவர்கள்

தடுத்து ஆடுகிறார்கள்
தலை தப்ப ஓடுகிறார்கள்
எல்லைக் கோட்டை நாடுகிறார்கள்
மூன்றாம் நடுநிலையாளரின்
தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள்


இடைவேளையில்

வேட்டு சத்தம் காதைப்பிழக்கிறது
வெடி சத்தம் வின்னைக் கிழிக்கிறது
நடுமுதுகில் எழும்பில்லாதவர்கள்
நடுநடுவே நடனமாடுகிறார்கள்

இவர்களின் வீழ்ச்சியை
அவர்கள் கொண்டாடுகிறார்கள்


சுற்றிலும்

பதட்டத்தோடு பார்த்துநிற்கும்
உற்றார் உறவினங்கள்
கூர்ந்து கவனிக்கும்
உலகப் பார்வையாளர்கள்

கருத்துச் சொல்லிப் பெயரெடுக்கக்
காத்திருக்கும் கணவான்கள்
தொடரும் நிகழவுகளை ஆரவாரமாய்
அறிவிக்கும் அறிவிப்பாளர்கள்

புதிய செய்திக்காக மட்டுமே
கவனித்திருக்கும் ஊடகங்கள்
தவறைத் தட்டிக்கேட்க முடியாமல்
திணரும் நடுநிலையாளகள்

இது எங்கோ நடக்கும் IPL
( இந்தியன் ப்ரீமியர் லீக் ) அல்ல

தெரிந்து கொள்ளுங்கள்
இது இங்கே நடக்கும் IPL
இது இனம் அழிக்கும் IPL

இலங்கையின் பழிவாங்கும் லீக் (IPL)
இலங்கையின் பலிகேட்கும் லீக் (IPL)
ஈழம் புறக்கணிக்கப்படும் லீக் (IPL)
ஈழம் புதைக்கப்படும் லீக் (IPL)