Friday, May 29, 2009

அயலகத்தில்,குழப்பத்தில் நான்.......



வெள்ளைத் தலையோடு
துள்ளிவரும் குமரிகள் !
வெண்ணையாய் வழுக்கிவரும்
வெண்பஞ்சு வாகனங்கள் !!
அயலகம் என்பது தானா
பூலோகத்தின் நடமாடும் சொர்க்கம் !!!

ஆயிரம் பேருக்கு இடையே
அந்நிய நாட்டவன் எனக்கு
அலுவலத்தில் பதவிஉயர்வு

அயராத உழைப்பிற்கும்
தளராத கட்டுப்பாட்டிற்கும்
கடவுள் தந்தபரிசு தானிது

ஐந்து நட்சத்திர உணவகம்
அனைத்து நண்பர்களுக்கும்
அலுவலகத் தோழர்களுக்கும்
ஆரம்பமானது ஆர்ப்பாட்ட விருந்து

மிகுதியான மனநிறைவையும்
வசதியான பணயிருப்பையும்
நண்பர்களிடம் நான் காட்ட
நல்ல தருணம் தான் இது

எதிர்பாராத வேளையில் திடீரென
எனது தட்டின் உள்ளிருந்து
முள் கரண்டிமுனையில் சிக்கி
கையில் வந்த கறுப்புமுடி
கவனத்தைக் கலங்கவைக்கிறது
சிந்தையைச் சிதறவைக்கிறது

எனதுயர் கோபமறிந்த
எனதுயிர் நண்பர்கள்
நிகழப்போவதை நினைத்து
திகைத்துப்போய் நிற்கிறார்கள்

நானோ எனக்குள் நூறுகூறாய்
நொறுங்கிக் கொண்டிருக்கிறேன்
எனைச்சுற்றி நிகழ்வதை மறந்து
எதற்குள்ளோ மூழ்கிக்கொண்டிருக்கிறேன்

முள்கரண்டியும் கறுப்புமயிரும் கூடி
முள்தூண்டிலும் நரம்புமாய் மாறி
ஆழ்மனதுக்குள் நங்கூரமாய் இறங்கி
ஆழப்பதிந்து நகர மறுக்கிறது

கறுங்கூந்தல் கடலில் நாளெல்லாம்
கண்மூடி மூழ்கிக்கிடந்த நினைவுகளை
கண்டம் கடந்து இழுத்து வருகிறது
கடந்த கனவுகளைக் கடத்தி வருகிறது

மனதுக்குள் வெளிறி
மெதுவாய் எழுந்து
மெல்ல வெளியேறி
மவுனமாய் நடக்கிறேன்

கோழியின் சிறகனைப்பில் சின்னக்குஞ்சுகள்
குஞ்சுகளுக்கு இரையூட்டும் சிட்டுக்குருவி
குட்டிகளோடு அலையும் வீட்டுப்பூனை
கூடி அலையும் அன்னப்பறவை
கூட்டமாய்த் திரியும் அண்டங்காக்கை

எதைப் பார்த்தாலும் எனக்குள்
என்னென்னவோ செய்கிறது மனதுக்குள்

என்ன ஆயிற்று எனக்கு??
என்ன செய்ய வேண்டும் நான்???

No comments: