
அம்மன்கோவில் அழகுச் சிலைபோல
அங்கேதான் அவள் நிற்கிறாள்
அதேகோவில் பலியாடு போல
அவள்முன் நான் நிற்கிறேன்
இருவருடத்தின் நட்பை அவளிடம்
ஒருநிமிடத்தில் காதலாய்ச் சொல்லி
பின்விளைவுகள் தெரியாமல்
தன்னிலை குலைந்து நிற்கிறேன்
சிறுத்த தையின் கண்களில்
சிறுத்தையின் சினம் காண்கிறேன்
வெண்புறா முகம் அதனில்
வண்புலியின் வேகம் பார்க்கிறேன்
வடிவு அவள் சொல்லப்போகும்
முடிவு மெள்ளக் காத்திருக்கிறேன்
கோதையவள் வாய் திறந்தவுடன்
கோடையிடி இறங்கப்போகிறது என்மேல்
"திறந்த என்மனம் புரிந்தறியும்
திறம் இல்லையா உனக்கு !
இதை என்னிடம் வந்துசொல்ல
இத்தனை நாளானதா மக்கு ?"
மெதுவாய்ச் சொல்லிவிட்டு
மெல்லத் திரும்பி நடக்கிறாள்
பயத்தில் காதடைதிருந்த எனக்கவளின்
வாயசைந்தது மட்டும்தான் தெரிந்தது
அய்யோ.............!
என்னவோ சொன்னாளே அவள் ?
ஏன்மிக மெதுவாக நடக்கிறாள் ??
ஏன்திரும்பித் திரும்பிப் பார்க்கிறாள் !
எதுவோ என்னிடம் எதிர்பார்க்கிறாள் ?!
தெரிந்த சேதி ஏதுமுண்டா உங்களிடம் ??
அறிவிக்க இயலுமா உடன் என்னிடம் ???
1 comment:
எதுகை மோனையோடு கவிதை நன்று
Post a Comment