Tuesday, August 11, 2009

நல்ல திட்டம்தான்..., நடக்காமத்தான் போச்சு .... !


வீதியில உருண்டு பொரண்டு
வீட்டுக்குள்ள வந்த பொறவுதான்
வீட்டுப்பாடம் செய்ய மறந்தது
விசுக்குன்னு ஞாபகம் வந்தது

காலைல வாத்தியாரு
கண்டபடி சாத்துவாரே !
முட்டிப்போட்டு வாசலிலே
முழுநாளும் நிறுத்துவாரே !

கக்கத்துல உள்ளி வச்சா
காய்ச்சல் உடனே வருமுன்னு
எங்கூடவே உள்ள ஒருகிருமி
ஏடாகூடமா சொன்னத நம்பி

வெங்காயத்த நெறயா உரிச்சு
வெளியே தெரியாம மறைச்சு
கக்கத்துக்குள்ள ஒளிச்சு வச்சு
கனாக்கூடக் காணாம கண்முழிச்சு
காலைல வரைக்கும் காத்திருந்தேன்

ராப்பொழுது முடிய முழுசாய்
ரெண்டு நாளு ஆகிப்போச்சே
காலைல எனக்கு லேசாவே
காய்ச்சலும் வந்தது போலவே.....

சோகமா முகத்த வச்சிக்கிட்டு
சுத்தி வந்தேன் அம்மா பின்னால...
நடக்கவே முடியாதவனப்போல
நடந்து காட்டினேன் அப்பா முன்னால....

சமையல முடிச்சு எடுத்து வச்சு
சாப்பாட்ட அடைச்சு கூடைல திணிச்சு
வாசல்வரை வந்து டாட்டா காட்டி
வாய் நெறைய சிரிச்சு வண்டியில ஏத்தி
வழியணுப்பியும் வச்சிட்டாங்களே......!

ஆகா....!
என்ன ஆச்சு !!
எங்கோ தப்பு நடந்துருச்சு !!!

யாருமே கவனிக்கலியே ?
எந்திட்டமும் பலிக்கலியே ?
என் நடிப்பும் கெலிக்கலியே ?

அம்மா... ஒத்த வார்த்த கேக்கலியே ?
அப்பா... நிமிந்து கூடப் பாக்கலியே ?
அய்யோ... எஞ்சோலியும் முடிஞ்சிருச்சே !

வாசலில பெரம்போட
வாத்தியாரும் காத்திருப்பாரு
வானத்துல ஏறப்போகுது
இன்னைக்கு எம்மானம் பாரு

வெங்காயத்த வச்சு நல்லா - உள்ள
வெந்து போக வச்சுட்டானே !
தப்பா சொல்லிக் கொடுத்து - இப்போ
தவிக்க வச்சிட்டுப் போயிட்டானே !!

எங்க இருப்பான் அந்தக் கிருமி !
நொங்க தேடித்தான் பிடிக்கணும் - நல்லா
வாங்கினத திரும்பக் கொடுக்கணும் இனி !!

3 comments:

ரமேஷ் said...

supper

தமிழ் காதலன் said...

//’’பத்து முத்தம் உள்ளேஇருக்கு - தெரியலியா
அப்பா அது இன்னும் உனக்கு’’

//

மிகவும் அழகான கொஞ்சல்.

உமா said...

மிக அழகாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.