Wednesday, August 12, 2009

கண்ணுக்குத் தெரியாதது ...?!?!


இன்று பிறந்த நாள் எனக்கு
இனிய விழா மாலையில் இருக்கு

இதோ....

என்னை வாழ்த்திப் பரிசளிக்க
ஆளாளுக்குக் காத்திருக்கிறார்கள்
கடைக்குட்டி அவளும் அதற்காக
காலையிலிருந்தே தயாராயிருக்கிறாள்

வாழ்த்துகளில் நனைந்து
விழிகலங்கி இருக்கிறேன்
பரிசுகளில் முற்றும்மூழ்கி
பரவசமாகி இருக்கிறேன்

*பெற்றோரின் ஆசீர்வாதம்
*உற்றோரின் ஆரவாரம்

*மனைவியின் முத்தப் புன்னகை
*மகள்தந்த புத்தம்பு துநகை

*என்மகன் அணிவித்த கைக்கடிகாரம்
*நண்பரின் அணிவகுத்த வாழ்த்துகானம்

உற்சாகம்....
எங்கு நோக்கினும் உற்சாகம்......

அடடா .....

அற்புதமான வேளையில்
அபரிதமான மகிழ்ச்சியில்
கடைசியில் அவளை மறந்தே போனேனே
கடைக்குட்டியைக் கவனிக்கவேயில்லையே

அதோ .......

என்முகம் பார்த்தே அமர்ந்திருக்கிறாள்
எதிரேயே அமர்ந்திருக்கிறாள் - எதையோ
எதிர்பார்த்தே அமர்ந்திருக்கிறாள்

அருகே அழைக்கிறேன்
அவளை அணைக்கிறேன்
பரிசை வாங்குகிறேன் - மெல்லப்
பிரித்துப் பார்க்கிறேன்

அட்டைத் தாளை வைத்து
அவளது மூளை உபயோகித்து
அவளாகவே தயாரித்து முடித்த
அளவான பரிசுப் பெட்டி அது !

ஒன்றுமே இல்லைப் பெட்டிக்குள் !
வெறுமையே இருந்தது பெட்டிக்குள் !!


ஆச்சரியமாக கண்சுருக்கி
நான் அவளைப் பார்க்கிறேன் !
அதிர்ச்சியாக கண் விரித்து
அவள் என்னைப் பார்க்கிறாள் ??


’’பத்து முத்தம் உள்ளேஇருக்கு - தெரியலியா
அப்பா அது இன்னும் உனக்கு’’


உறைந்து போகிறேன் - எனக்குள்
உடைந்தும் போகிறேன்

நானென்ன பெரியவன் ?- இங்கே
அவளென்ன சிறியவள் ??

1 comment:

உமா said...

வாவ். மிக அருமை.