Friday, July 9, 2010

யார் சொல்லி........!


’’பச்ச ஒடம்புக்காரீ’ன்னு
பவுசாத்தான் படுக்க முடியுமா ..?

கொளுந்தியாளப் போல நானும்
கெழுத்தியப்போலக் கெடக்க முடியுமா ..?

காலைல...
சாவலை எழுப்பி வெரட்டி
சாலையைக் கழுவி பொரட்டி

தூக்கத்தை மொத்தமா வெலக்கி
முத்தத்தை சத்தமில்லாம ஒதுக்கி
தூக்கை சுத்தமா தொலக்கி

நீச்சத் தண்ணிய ஊத்திக்கிட்டு
பச்சப் புள்ளயத் தூக்கிக்கிட்டு

எட்டுபோட்டு நடக்கணும்
காட்ட மேட்டக் கடக்கணும்
தோட்டம் போயிக் கெடக்கணும்......

புள்ளய அமத்திப் போட்டு
புல்லறுக்கப் போகணும்

அரை வயிறு கஞ்சிக்கு
நெஞ்சிமுட்ட சொமக்கணும்

ம்ம்ம்ம்ம்...............”

நட்ட நடு சாமத்துல
காதடைக்கும் பசியால
கெட்ட சுடும் நெனப்புல
அரைக்கோழித் தூக்கத்துல
பொரண்டுத்தான் படுக்கையிலெ

ஏங்காதுக்குள்ள பச்சப்புள்ள
ஏங்கியழும் சத்தம் கேட்டு நான்

ஒதறிப் பதறி குத்தவச்சேன்
அவசரமாத்தான் பாத்துவச்சேன்

ஒதட்டுப்பால் குடிச்சுக்கிட்டு
எதமாத்தான் தூங்குதான் என்ராசா

’கெழக்கால ஒருபுள்ள
பாலுக்கு அழுதிருக்கு’


பாயில சாயயிலத்தான்
பாவிமக கவனிக்கேன்....

எங்கேயோ கேட்ட
ஏங்கியக் குரலுக்காக
இங்கே நனைஞ்சிருக்குது
என்னோட மாராப்பு.............................!


.

1 comment:

நிலாமதி said...

தாய்மையின் வலி .....அழகாய் வந்திருக்கிறது.