Tuesday, August 3, 2010

வளையல் சத்தம் ........!


கண்ணாடி
வளையல் சத்தம்......

முற்றத்தில் மரநிழலில்
கயிற்றுக் கட்டிலில் நான்...
உள்ளம் கண்டபடி
கொந்தளித்தபடி இருக்கிறேன்..

உள்ளே
அவள் எதையோ
மெதுவாய் கோபமாய்
தாளித்துக் கொண்டிருக்கிறாள்....


’நேற்றுவரை அமுதமாய்
இப்போதோ அமிலமாய்...’
இங்கேவரையிலும்
அந்த வளையல்சத்தம்
வந்து வதைத்துக்
கொண்டிருக்கிறது என்னை....


’கலியாணக் கறுக்கே
இன்னும் கொறையலியே
அதுக்குள்ளார
குடிசைக்குக் குறுக்கால
கோட்டைப் போட்டிருவாளோ ?

அதுக்குள்ள இதுக்குள்ளே
என்னதான் குறைச்சலாம் அவளுக்கு ?
எங்கேயும் அமையுமா
இப்படியொரு கூட்டுக் குடும்பம் !

பத்துக்குப் பத்துதான் வீடுன்னாலும்
பக்கத்தல இருந்து பாத்துக்கும் மாமியாரு
வெக்கத்துல திரும்பி நிக்கும் கொழுந்தனாரு
காலுக்குள்ள சுத்திவரும் நாத்தனாரு
காதுக்குள்ள வந்துபேசும் பூட்டனாரு

என்னதான் குறைச்சலாம் அவளுக்கு ??’


வளையல் சத்தம் நெருங்க
வந்துவிட்டாள் மிகவும் அருகே

வெட்க்கத்தைக் கொன்றுவிட்டு
வேகமாகத்தான் வந்து நிற்கிறாள்

”போகணும்
தனியேப் போகணும்”


ஒரு நொடியில்
எனக்கு உயிரே போனது

”நீங்க மட்டும் போகணும்
சந்தைக்கு சட்டுன்னுப் போகணும்”


சடுதியில் பாதியில்
போன உயிர் தொங்கியே
கேள்வியோடு நின்றது

”வாங்கி வரணும்
உடனே வாங்கி வரணும்
’ரப்பர்’ வளையல் வாங்கி வரணும்”



இப்போதுதான் கவனிக்கிறேன்

வெட்கம்தான் அவளைத்
தின்று கொண்டிருக்கிறது .

.

No comments: