Wednesday, September 8, 2010

பதிவுகள்(2) : வாழும் வழிகாட்டி
14.04. 2000 :

தாதன்குளம் , தூத்துக்குடி மாவட்டம் . ஒரு பள்ளிக் கூடம கட்டும்வேலை சம்பந்தமாக எனக்கு ஒரு அழைப்பு . 13மாவட்டங்களில், 100க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களின் தலைவர் , தமிழகத்தின் குறிப்பிடத்தக்கப் பெரியவர்களுள் ஒருவரை சந்திக்கப் போகிறோம் என்ற எண்ணமே பெரும் மகிழ்வைத் தந்தது . ஒரு கார்ப்பொரேட் அலுவலகம் , ரிசப்சனிஸ்ட் , நுனி நாக்கு ஆங்கிலத்தில் கேள்வி பதில்கள் என சில எதிர்பார்ப்புகள் / ஒத்திகைகளுடன் கிளம்பிச் சென்றேன் .

தோட்டத்து பண்ணைவீட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒருசிலரைத் தவிர நான் எதிர்பார்த்த பரபரப்பு ஏதுமில்லை . கதர்துணியில் தைக்கப்பட்ட பனியன் , பழைய நைந்துபோன தேங்காய்ப்பூத்துண்டுடன் ஒரு பெரியவர் , வந்திருந்த யாரையோ கார் கதவைத் திறந்துவிட்டு , வழியனுப்பி வைத்துக் கொண்டிருந்தார்.

வாசலில் நின்றுகொண்டிருந்தேன் . காத்திருந்த வேளையில் மெலிதான பதட்டம் . கைகள் பக்கதிலுள்ள வேப்பமரத்தின் இலைகள் ஒவ்வொன்றாக கிள்ளிக் கொண்டிருந்தது .

சிறிது அமைதி . பின்னாலிருந்து எனது தலையில் செல்லமாக ஒரு குட்டு விழுந்தது . அதே பெரியவர் பின்னால் நின்றிருந்தார் .

’’அந்த மரம் உங்களை என்ன பண்ணுச்சு கண்ணு ’’

தீர்க்கமாக எனது கண்களுக்குள் பார்த்துவிட்டு

“தம்பிக்கு சாப்பிடக் கொடுங்க”


எனச் சொல்லிவிட்டு உள் நோக்கி சென்றுவிட்டார் .மரம்தானே , இலைதானே என சாதாரணமாக நினைத்துக் கொண்டிருந்த எனக்கு அந்தக் கேள்வி சம்மட்டி அடியாய் விழுந்தது . ஏதோ தவறாக செய்து கொண்டிருக்கிறேன் என்பது மட்டும் புரியத் தொடங்கியது அந்த நொடியில் .

உள்ளே சென்றேன் . வெளிமுற்றத்தில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார் அவர் .

‘எங்கே போனாலும் இவருதான் இருக்காரு ,யாராய் இருக்கும் ?’


மேற்கொண்டு விசாரிக்க அருகில் யாரும் இல்லை . மெதுவாக அவரிடமே விசாரிக்க முடிவு செய்தேன் .

”இங்கே சேர்மன்.குப்புசாமி சார் அவர்களை பார்க்கணும்”


”சொல்லுங்க கண்ணு , நான் தான் குப்பன்”

இடி இறங்கியது போல உணர்ந்தேன் . எனது கணிப்புகள் / எதிர்பார்ப்புகள் எல்லாம் குலைந்து நொடியில் பாலையில் ஒருபிடி மண்ணைப்போல என்னை உணர்ந்தேன் .

இந்த அளவுக்கு எளிமையாய் நான் இதுவரையில் யாரையும் சந்தித்ததில்லை .அப்போதைக்கு இருசக்கர வாகனத்திலிருந்து நான்கு சக்கரத்திற்கு மாறி இருந்தைதையே நான் உலக சாதனைபோல எண்ணியிருந்தது அப்போதுதான் எனக்கு உறைத்தது . அய்யாவின் சந்திப்பு வாழ்க்கையில் புதிய மாற்றத்தை எனக்குள் உரைத்தது .
எனக்கான போதிமரம் அங்கே இருந்தது .

நான் வந்து சேர்ந்த இடம் பற்றி தெரியத் தொடங்கியது எனக்கு. உழைப்பின் பொருள் புரிய ஆரம்பித்தது எனக்கும் . புதியதாய் ஒரு உலகம் விரிய ஆரம்பித்தது எனக்குள்.

அவர்
ஆர்.வி.எஸ்.கல்வி அறக்கட்டளையின் தலைவர் .
திரு.கே.வி. குப்புசாமி அய்யா .அவர்கள்
. 69 வயதிலும் அரை நொடி ஓயாமல் அனைத்து இடங்களிலும் சுழன்று வருகிறார் . கல்வித்துறையில் மிகப் பெரிய சாதனையாளர் . இங்கே அவருக்குள் மறைந்திருக்கும் விவசாயியையும் , மனித நேயத்தையும் வெளியுலகப் பார்வைக்கு எடுத்து வைப்பதே கட்டுரையின் முதன்மை நோக்கம் .

திட்டங்களை நடைமுறைப் படுத்துவதில் புதிய செயல் முறைகளுக்குச் சொந்தக்காரர் அவர். திட்டங்களை விளையாட்டாய் ஆரம்பித்து ,வித்தியாசமாய்த் தொடர்ந்து , விதிமுறைகளைக் கடந்து , விசுவரூபமாக்கிக் காட்டுவார்.

( ஏடுத்துக் காட்டாக
: மாலை ஆறுமணி . செம்மண்சரல் அடித்து நிரப்பப்பட்ட குழந்தைகளுக்கான பள்ளி மைதானத்தில் வந்து அமர்ந்தார் . மெதுவாக சில கற்கலைப் பொறுக்க ஆரம்பித்தார் . நாங்களும் தொடர்ந்தோம் . அந்த வழி வந்தவர்களும் தொடர்ந்தார்கள் .மூன்றே நாட்கள் .. விளையாட்டாக அந்த மைதானமே குழந்தைகள விழுந்து விளையாடும் அளவுக்கு சுத்தமாகி இருந்தது )

2010 :பத்தாண்டுகளில் மழைமறைவுப் பிரதேசங்களாக இருந்த , மேய்ச்சல் நிலங்களாக , காலடித்தடமே படாத வறண்ட இடங்களில் மழையின் நேசம் , மண்வாசம் வீசத்துவங்கி இருக்கிறது

தரிசாகக் கிடந்த இடங்களை சோலைகளாக்கி , மரங்களுக்கு நடுவில் மழை நீரை சேகரிக்க ஒரு குளம் வெட்டி , வறண்ட் பூமிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரவைத்து , தன்னை சுற்றியுள்ள விவசாயிகளின் வாழ்வு உயரவும் வழி செய்திருக்கிறார் .

ஒரு தனிமனித முயற்சியில் ,பத்தாண்டுகளில் இது சாத்தியமென்றால் , ஆள்வோரும் ,அதிகாரவர்க்கமும் அய்யாவின் பாதையில் தொடர மனம்வைத்தாலே போதும் ., தமிழகம் சொர்க்கமாகும் காலம் வெகுதொலைவில் இருக்காது .


அசோகர் மரம் நட்டினார் ,கரிகாலன் குளம் வெட்டினார் என்று பள்ளிப்பாடங்களில் வரலாறாகப் படித்தை நேரில் காணும் வாய்ப்பும் , அந்நிகழ்வில் பங்குபெறும் பாக்கியமும் பெற்றதே எனது பிறவிப் பயனாகும் .

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் பரந்து விரிந்த மிகப் பெரியக் கூட்டுக் குடும்பம் இவருடையதுதான் என்று சொன்னால் அது மிகையாகாது . குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 3 லட்சங்களுக்கும் மேல் . ஆம் அவர் தனது குழந்தைகளாக பராமரித்து வரும் மரங்களின் எண்ணிக்கை இது . ஒவ்வொரு மரத்திற்கும் தனித்தனி கவனிப்பு முறைகள் , வளர்ச்சிக் குறிப்புகள் , சொட்டு நீர்ப்பாசன வசதிகள் , இயற்கை உரங்கள் .

எங்கோ ஒரிடத்தில் ஒருமரத்தின் கிளை முறிந்தாலும் உடனடியாக செய்தி அவரை வந்து சேரும் அளவுக்கு மிகப்பெரிய அமைப்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். மரங்களின் மேல் பாசம் கொண்ட ஒரு தனி மனிதச் சாதனையாகும் இது .


அவருக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களில் பல கட்டிடங்கள் நேர்கோட்டில் இல்லாமல் சில இடங்களில் விலக்கிக் கட்டப் பட்டிருக்கும் . சிறிது கூர்ந்து கவனித்தால்தான் தெரியும் .அது பொறியாள்ர்கள் தவறல்ல என்பதும் ,அவை மரங்களுக்காக தனது நேர்த்தியை விட்டுக்கொடுத்து ஒதுக்கிக் கட்டப்பட்டுள்ளன என்பதும் .இங்கே கட்டிடமே முதன்மை என்றாலும் , ஏதாவது ஒரு மரத்தின் ஒரு கிளை கூட இதனால் ஊனமாக அவர் ஒருபோதும் ஒத்துக்கொள்ள் மாட்டார்

மரம் வளர்த்து ,மண்ணுயிர் போற்றி , வரும்காலம் காக்கும் மாமனிதரின் அருகில் குடியிருக்க ஆண்டவனும் விரும்புவார் . விரும்புகிறார் .

ஆம் .... அய்யா இருக்கும் கோவை , சூலூரில் அவரது அயராத உழைப்பில் ,தமிழகத்தின் ஆறுபடை முருகனும், ஆந்திரத்தில் இருந்து பூதேவி, ஸ்ரீதேவியுடன் திருப்பதியும்
எற்கனவே குடிகொண்டு விட்டார்கள் .

12.09.10ல் கேரளத்தில் இருந்து பகவதி அம்மனும் குடியேறுகிறார்

உழைப்புக்கு ஒர் உண்மையான எடுத்துக்காட்டு .
உலகைக் காக்கும் மரம் வளர்ப்புக்கு ஒரு வாழும் வழிகாட்டி .

பலன் எதிர்பாராமல் பாரம் சுமந்து கொண்டிருக்கிறார். அதையும் கடமையாய் செய்து கொண்டிருக்கிறார் .

அவரது அயராத உழைப்பினை உணர்ந்து கொண்டுள்ளோம் எனபதை அவருக்குத் தெரியப் படுத்துவோம் . உற்சாகம் அளிப்போம் . [அய்யாவின் அலைபேசி எண் : 9443169333 , 9842288333]

அய்யா அவர்களின் வழி தொடர்வோம். வருங்காலம் காப்போம் !


எனக்கு முடிந்த அளவில்
அய்யாவுக்கு ஓரு குறள் அதிகாரம் :


உலகத்தைக் காக்க மரம்வளர்ப்போர் சுற்றி
உலவ விரும்பும் இறை...........................[01]

மரம்வளர்த்து மண்ணுயிர் காப்போர் அருகில்
குடியிருக்க எண்ணும் இறை.......................[02]

இரங்கும் மனம்கொண்டு இல்லாதோர் போற்று;
இறங்கும் உனக்குள் இறை........................[03]

செந்தமிழால் வாழ்த்துவார்; வந்தாரைப் போற்றுவார்
கந்தனே சாமி அவர்க்கு...........................[04]


ஐயன் அருகிருந்தால் ஐயம் தெளியும்;
வாய்க்கும் சிறந்தநல் வாழ்வு......................[05]

எட்டு திசையும் எடுத்துரைப்போம்; அய்யனென்றால்
நட்பென்றும் ஓர்பொருள் உண்டு...................[06]

எங்கிருந்து வந்தாலும் நல்அபயம் வாய்த்திடும்;
கொங்கில் கிடைத்திடும் வாழ்வு....................[07]

எதுவும் நிலையில்லை என்ப(து) உணர்ந்தார்க்(கு)
எதுவும் மலையில்லை இங்கு.....................[08]

வாழ்த்த வயதில்லை; வானுயர் அய்யாவின்
வாழ்க்கைத் தடம்தொடர் வோம்...................[09]

காணும் கனவெல்லாம் மெய்ப்படும்; மொத்தமாய்
வானமும் நம்வசப்ப டும்.........................[10]


என்றும் அன்புடன் -- துரை --

வெண்பாக்கள் : ‘மரபுக் கனவுகள்’ : http://marabukkanavukal.blogspot.com/
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள் : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள் : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம் : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

4 comments:

Haiku charles said...

Nalla irukku nanba

மதுரை சரவணன் said...

//அசோகர் மரம் நட்டினார் ,கரிகாலன் குளம் வெட்டினார் என்று பள்ளிப்பாடங்களில் வரலாறாகப் படித்தை நேரில் காணும் வாய்ப்பும் , அந்நிகழ்வில் பங்குபெறும் பாக்கியமும் பெற்றதே எனது பிறவிப் பயனாகும் .//

சிறந்த மனிதரைப்பற்றிய பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

jothi said...

பகிர்வுக்கு நன்றி

Anonymous said...

அன்புடையீர்,
குப்புசுவாமி ஐயா அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைந்ததில் அவரது எளிமையும், முயற்சியோடு ஒரு காரணம் தானே . நல்லதொரு தகவல் தந்தமைக்கு நன்றி !

இவண்,
மரு. ரங்க பிரசாத் பட்
http://drrangaprasadbhat.blogspot.com