உச்சந்தலையில் விழுந்திருக்கிறது பல்லி...
இடிந்துபோய் முடங்கிக்கிடக்கிறாள் அவள்...
முன்பொருமுறை...
அப்பாவின்மேல் விழுந்ததற்கே
படபடத்து...பதறித்துடித்து
பூசையும் பரிகாரமுமாய்
ஊரையே கூட்டி...
வீட்டையும் இரண்டாக்கி...
தலைகீழாகப் புரட்டித்தான்
போட்டிருக்கிறாள் அம்மா ..
ஓ.....
இது உச்சந்தலை ....
நினைக்கும்பொழுதே உள்ளம்
வெடித்துச் சிதறுகிறது அவளுக்கு...
சோதிட...எண்கணித...வாஸ்து...
வல்லுனர்களைத் தேடியும்
பெயரியல்...ப்ரசன்ன...நவரத்தின...
நிபுணர்களை நாடியும்
வீதிவீதியாய் படபடப்புடன்
அலைந்து கொண்டிருக்கிறது பாதிக்குடும்பம்
அவளுக்கு விளங்கச் சொல்லி
துலங்கவைக்கும் வழிதெரியாமல்
பரிகாரமுறையும் சரியாகப்புரியாமல்
தொலைக்காட்சியின் முன்
விடைக்காகப் பதட்டத்துடன்
நகம்கடித்துக் காத்திருக்கிறது மீதிக்குடும்பம்
தனியே....
பல்லி விழுந்த
மரப்பாச்சி பொம்மையின்
தலையைத் தடவியபடியே
தேம்பலுடன் விரல்சப்பி
தூங்கிக்கொண்டிருக்கிறாள் அவள்...
திருதிருவென விழித்தபடி...
அருகிலேயே இருக்கிறது
’அந்த’ ரப்பர் பல்லியும்.........
4 comments:
கலக்கல்! கலக்கல்!! கலக்கல்!!!!
நல்லாருக்கு.
சேட்டைக்காரனுக்கும் அய்யாவுக்கும் நன்றி
interesting.
பரிகாரம் தெரிந்தால் நீங்களாவது சொல்லுங்களேன்......
Post a Comment