Wednesday, February 23, 2011

12.அவளது முன்கதையை முடிக்கும் நேரமிது....!

அரங்கேற்ற வேளை / அரங்கேற்றும் வேலை :

ஆம்.....

இன்றோடு....

நூறு நாட்கள் கடந்துவிட்டன - நான்

நூலிழையில் முடிவெடுத்திருக்கிறேன்

அவள்கதையின் அரங்கேற்ற வேளை என்று...

எனக்கதை அரங்கேற்றும் வேலை இன்று...

என்னவிலை கொடுத்தும் முடிப்பேன் நன்று...


எதற்கும் உண்டே எல்லை..

இன்றுடன் கதையை முடித்துவிட்டால்

இனியும் தொடராது இந்தத் தொல்லை...

பெருமைக்குக் கறையென்று ஒன்று வருமென்றால்

பொறுமையும் கரைந்து குறைவதில் தவறில்லை


வலதுகால் வைத்து விளக்கேற்றி

எனது வீட்டுக்குள் வந்துவிட்டாள்தான்...

அவள்மனக் கூட்டுக்குள் இருக்கிறேனா

எனும் கேள்விச்சூட்டில் வெந்துவிட்டேன்நான்..


ஆம் இல்லை என்பதே

அவளிடம் வேகமாய்வரும் வார்த்தைகள்

அந்த அழ்கடல் அதிர்வுகள்தான்

என்னை வேகவைக்கும் சாட்டைகள்


சைகையால் உரைப்பாள் சமயத்தில்

கண்சாடையால் உறைப்பாள் - நான்

சல்லி சில்லியாய் உடைவேன்

சுக்கல் சுக்கலாகி மடிவேன்


என்னுடன் அவள்பேசியதைத் தொடுத்தெடுத்தால்

பத்து பக்கத்தில் அடக்கிவிடலாம்

நான் அவளிடம்புலம்பியதைத் தொகுத்தெடுத்தால்

பக்கத்து மெத்தையையே அடைத்துவிடலாம்


ஒருவேளை இருக்கலாம்

ஏதாவதொரு பழைய மனச்சுமை...

அவளாக இறக்குவாளென

அமைதியாய்க் காத்திருந்ததன் பலன்

இன்று தலைக்குமேல் வெள்ளமாகி

பலமாய் அழுத்தத் தொடங்கிவிட்டது


இதோ..

வந்து நிற்கிறாள் அவள்..


திட்டமிட்டபடியே

காலணிகள் இடம்வலமாய் உதற

முன்னால் உள்ளதெல்லாம் சிதற

பாத்திரங்கள் உடைந்து நொறுங்க

பத்திரங்கள் நைந்து பறக்க.......


உருவம்தான் மாறவில்லையே தவிர

மிருகத்துக்குள் ஏறியிருந்தேன் நான்


இன்றுதான் அவளது

உலகவாழ்க்கை வரலாற்றிலேயே

முதன்முறையாய் ஒரு கோரதாண்டவத்தை

நேரடியாய் பார்த்திருப்பாள் போலும்

மிகஅதிர்ந்து மூலையில் ஒடுங்கி

வாய்திறந்து பெரும்குரலெடுத்து

‘ஓவென அழ ஆரம்பிக்கிறாள் .


ஆகா...

இதற்குத்தானே காத்திருந்தேன்....


ஓடிச்சென்று கட்டியணைத்து

முதுகை வருடி தலையைத் தடவி

மெல்ல அவள் காதருகில்

செல்லமாய் கிசுகிசுக்கிறேன்

.உனக்கு பாடவும் தெரியுமா..?

முகாரி ராகம் இது ...!


சட்டென அழுகையை நிறுத்தி

சரேலென என்னை விலக்கி

விறுவிறுவென எதையோ தேடி

குறுகுறுவென பார்க்கிறாள் என்கண்ணுக்குள்


எதோ கிடைத்திருக்க வேண்டும் அவளுக்கு..

பொங்கும் வெட்கத்துடன்

இருகரம் கொண்டு வாய்ப்பொத்தி

அறையெங்கும் எதிரொலிக்க

அருவியாகச் சிரிகிறாள்

அடடா.... இது ஆனந்த பைரவி......!

கரு : மகாபாரதம் / கண்ணன்


1 comment:

இராஜராஜேஸ்வரி said...

அடடா.... இது ஆனந்த பைரவி......!”//
&picture super.