இனியொரு விதி செய்ய.. இனியாவது செய்ய...
Monday, November 10, 2008
அந்த ஐந்தாவது நபர் !
அம்மா மடியில் நான்
தலை வைத்திருக்க
அப்பா கால் அமுக்க
அக்கா விரல் சொடுக்க
அரைக்கண் திறந்து
அறையோர சன்னலைப் பார்க்கிறேன்
சாத்திய கதவுக்குப்பின்னால்
ஏக்கத்தோடு இரு கண்கள்
என்னையே பார்த்துக்கொண்டிருப்பது
எனக்கு மட்டும் தெரியும்
சனிக்கிழமை சாயங்காலம்
அப்பா வாங்கிவரும்
இனிப்புச் சேவுக்கும்,
அம்மா பாசத்தையும் சேர்த்து
கரைத்துவைத்த கஞ்சிக்கும்
அரைத்துவைத்த துவையலுக்கும்
அக்காவோடு சண்டைபோட்டு
வரிசையில் நிற்கும்
கடைக்குட்டி எனக்கு
பின்னாலிருந்து
நீட்டிக் கொண்டிருக்கும்
இரண்டு கைகள்
எனக்கு மட்டும் தெரியும்
அப்பாவின் கண்ணைக் கட்டிவிட்டு
அம்மா கதவுக்குப் பின் மறைய
அக்கா கட்டிலுக்கு கீழே பதுங்க
அவசரமாய் இடம் தேடி நான்
அலமாரி கதவு திறக்க
அங்கே எற்கனவே முக்காடிட்டு
ஒளிந்திருந்தது யார் என்று
எனக்கு மட்டும் தெரியும்
அப்பாவின் மிதிவண்டியில்
எங்களுக்கே இடமில்லாதபோது
விடாமல் பின்னால்
அடம் பிடித்தபடி
தொங்கிக்கொண்டே வரும் அந்த
ஐந்தாவது நபர் யார் என்று
எனக்கு மட்டும் தெரியும்
அப்பாவுக்கு நெஞ்சுவலி என
அவசர சேதி வர
புதை மணலில் நெஞ்சம்
பதைபதைக்க ஓடும்
என்னைத் தாண்டி
முன்னால் பதியும்
காலடித்தடங்கள்
யாருடையது என்பது
எனக்கு மட்டும் தெரியும்
எல்லோருக்கும் தெரியும்
என்குடும்பம் ஒரு கோவில் என்று
எனக்கு மட்டுமே தெரியும்
அந்த ஐந்தாவது நபர்
கடவுள் என்று.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment