Thursday, May 14, 2009

அம்மா, அவள், என் சுவாசம்....


ஐயிரண்டு திங்களாய்
அன்னையுள் வசித்து

ஆழ்குள மீன்போல
அக்கிநீருள் சுவாசித்து

பரந்தஉலகில் நான்
பிறந்தநாளன்று தான்

கிடைத்தது எனக்கு முதல்
காற்றின் புதிய சுவாசம்

ஐநான்கு வருடமாய்
பத்தோடு பதினொன்றாய்

விறிந்த உலகில் பிடியின்றி
வீணே சுற்றித்திரிந்த நான்

வானத்து தேவதையவளை
வாழ்வின்வாசலில் சந்தித்த நாள்

அறிதாய் எதுவோ உணர்ந்தேன்
புதிதாய் மறுபடி பிறந்தேன்

வஞ்சிக்கொடி அவளை
நெஞ்சில் நினைக்கும் பொழுதினில்
திடுக்கென எனக்குள்
நொடிகொருமுறைப் பிறக்கிறேன்

பிறக்கும்போதெல்லாம் பறக்கிறேன்
பறக்கும்போதெல்லாம் கிடைக்கிறது
என் முதல்காதலின் புதிய சுவாசம்

Wednesday, May 13, 2009

ஆண்டவனுக்கு ஒரு அவசரத் தந்தி.....!


வானுகத்தில் கடவுள்
வாட்டமாய் இருக்கிறார்
நிலவரம் புரியாமல்
நிலைகுழம்பி இருக்கிறார்
பூமியில் நடப்பதறியாமல்
புலம்பிக் கொண்டிருக்கிறார்

"அன்று
தமிழகம் முழுவதும் வறட்சியில் மிதக்க
திருமங்கலம் மட்டும் வசதியாய் தெரிந்தது !
உலகிலேயே செழிப்பான நகரம் என்ற
உயர்ந்த பட்டமும் கொடுத்தோமே !!

இன்று
உலகம் முழுவதும் வறண்டு கிடக்க
உணவு கிடைக்காமல் புரண்டு படுக்க
இந்தியா முழுவதும் பசுமையாய்த் தெரிகிறதே !!!

அட !
அப்படி என்னதான் அங்கே ?!

வறட்சி காலத்திலும்
வளமாய் இருக்கும் ரகசியம் !
வறண்ட நேரத்திலும்
வாழ்வு செழிக்கும் அதிசயம் !!

உலகெங்கும் நடப்பதென்னவோ
கலிகாலம் மட்டும் தானே !
இந்தியாவுக்குள் மட்டும் என்ன
இப்போது நடப்பது பொற்காலமா ?

எப்படி இந்த மாற்றம் ?
எதனால் இந்த ஏற்றம் ?
என்ன தான் நடக்குமங்கு ?
எத்தனை நாள் தொடருமிது ?

ஒன்றுவிடாமல் தெரிந்துகொண்டு
ஏனையநாடுகளுக்கும் உடனேபரப்ப
ஆவன செய்யவேண்டும் !
அவர்களும் பிழைக்கவேண்டும் !!

ஒடுங்கி இருக்கும்
உலகப் பொருளாதாரம்
உயிர்பெற்று தலைதூக்க
உதவி செய்யவேண்டும் "


இந்தியப் பயணத்துக்கு தயாராகிறார்
இன்று இரவுதான் கிளம்பப்போகிறார்

இன்றுதான் மே 13
இன்றுதான் கடைசி நாள்

எதிர்பார்த்து வருபவர்
தாமதமாக வந்தால்
ஏமாந்துதான் திரும்புவார்

நாலும் தெரிந்தோரே
நாலு மணிக்குள் வந்துசேர
உண்மை நிலை விளக்கி
உடனடியாய் தந்தி கொடுங்கள்

Tuesday, May 5, 2009

பார்த்தவுடன் வருமா காதல் ?!


"முகம் பார்த்தவுடன் காதல்"
"நகம் பட்டவுடன் காதல்"

எதிர்ப்பவனை முட்டாள்
என்பேன் நான்

முழு சாட்சியாய்
முன்னால் நான்

நானும் காதலிக்கிறேன்
நாற்பது வருடங்களாக

என்றும் காதலிப்பேன்
என் அம்மாவை




நன்றி :கரு/கு.த.ந

Monday, May 4, 2009

நகைப் பெட்டி



வீட்டில் நட்டநடு நாயகமாய்
கூடத்தின் நடுவில் அந்தப் பெட்டி.

பரம்பரை பரம்பரையாய் தொடர்ந்து
பாதுகாக்கப்பட்டு வரும் பெட்டி.

நூறு ஆண்டுகளுக்கு முன்னால்
மறைந்துபோன பொருளின் மாதிரி
அதனுள் இன்னும் இருக்கிறது
அதுவும் ஒன்றுதான் இருக்கிறது

சிறு குழந்தையாய் இருக்கும்போததை
ஒருமுறை நேரில் பார்த்திருக்கிறேன் !

குடும்பத் தலைவிக்கும் மகளுக்கும்
கேள்விஞானம் தான் அதைப்பற்றி !!

எனது பேரக் குழந்தைகளுக்கு
என்னவென்றே தெரியாது அது !!!

இந்தப்பெட்டியை திறந்து பார்க்கத்தான்
இங்கே வந்து கொண்டிருக்கிறார்கள்.

வாசல் வரை வந்து அவர்களை
வரவேற்று அழைத்துச் செல்கிறேன்
இருக்கையில் அமரச் செய்கிறேன்
இருண்டுகிடக்கிறது அனைவரது முகமும்

ஆர்வமாய் கேட்கிறது குழந்தை
"அது இன்னுமிங்கே இருக்கிறதா ?
எப்படி இருக்கும் அது ?
இப்போதே பார்க்க வேண்டுமே !"


அமைதியாய் பதில் சொல்கிறேன்
"புது வருடப் பிறப்புக்கான
பரிசு உங்களுக்கு அதுதான் !
பார்ர்க்கலாம் அதைக் அதிகாலையில் !!


விடிந்த பின் எல்லோருக்கும்
வந்திருக்கும் அனைவருக்கும்

சிரிப்பின் முகம் காட்டக் காத்திருக்கிறது
சிரிப்பின் மாதிரி அடைக்கப் பட்டிருக்கும்

அந்த நகைப் பெட்டி( சிரிப்புப் பெட்டி )

விடிந்தால் புதுவருடம் கி.பி.2200

Friday, May 1, 2009

அலையின் சீற்றமா?....



அழகுக் குழந்தைபோல
ஆர்ப்பாட்டம் செய்யாமல்
அமைதியாய் இருப்பவனை

விளையாடும் ஆசையோடு
வரிசையாய் அசைந்தாடி
விரும்பி வருபவனை

தரை தொட்டவுடன்
தலைகுனிந்து வெட்கி
திரும்பி ஓடுபவனை

ஏழைக்கு உதவுபவனை
எதிர்பார்ப்பு இல்லாதவனை
எதுவுமே தெரியாதவனை

ஏமாற்றித் தூண்டிவிட்டு
பிரமாண்டமாய் எழுப்பிவிட்டு
ஆர்பரிக்க வைத்துவிட்டு
ஏதேதோசொல்லி ஏவிவிட்டு
கரையும் தாண்ட வைத்துவிட்டு

எதுவுமே தெரியாததுபோல
நல்லவன்போல நாடகமாடி
நமுட்டுச் சிரிப்போடு
நடப்பதைப் கவனிக்கிறது
நயவஞ்சகக் காற்று

மே தினம் / இன்று புதிதாய் பிறப்போம்.....!


இதோ வந்துவிட்டது
மற்றுமொரு மே தினம்

8மணி நேர உழைப்புக்காகவும்
உழைப்புக்கேற்ற ஊதியத்துக்காகவும்
உருவானதுதான் இந்த மே தினம்

1880ல் அமெரிக்காவில் உருவாகி
10 வருடம் போராட்டக் கருலிருந்து
1890ல் பாரீசில் பிறந்த அந்தக்
குழந்தைதான் இந்த மே தினம்

1923லிருந்து இந்தியாவில்
கொண்டாடப்பட்டு வரும்
விடுமுறை நாள்தான் மே தினம்

8மணிநேர உழைப்பையும்
8மணிநேர வாழ்க்கையையும்
8மணிநேர உறக்கத்தையும்
உணர்த்தத்தான் இந்த மே தினம்

அரசுத்துறை ஊழியர் தவிர
அறிந்திடுவாரா யாரும் இந்த
8மணிநேர மே தின சித்தாந்தம்?

கல்லுடைக்கும் கொத்தடிமைகள்
தோட்டத் தொழிலாளர்கள்
ஆலை ஊழியர்கள்
நெசவுத் தொழிலாளர்கள்
ஒப்பந்த ஊழியர்கள்
வியாபாரத்தள வேலையாட்கள்
தினக் கூலிகள்
..............
இவர்களில் எத்தனைபேர் அறிவார்
இனிய இந்த மே தினம்

கால் நூற்றாண்டாய்
கால் கடுக்க மிதிவண்டியில்
காலம் முழுதும் தொழிலாளியாகவே
உந்திக் கடந்து கொண்டிருக்கிறார்
உழைப்பாளி ஒருவர்

நேற்று வந்து இறங்கிய
திசையே தெரியாதவன் தொழிலதிபர் ஆகிறான்
வட்டிக்கடை வைத்தவன் வசதியாய் இருக்கிறான்
கந்துவட்டிக்காரன் காரில் போகிறான்
அடிப்படை தெரியாதவன் அரசியல் செய்கிறான்
பஞ்சாயத்து செய்பவன் பலதேசம் போகிறான்
உழைப்பாளியோ வெறும் காலில் நடக்கிறான்
வாழும் வழி இன்றித் தவிக்கிறான்


மேலதிக வேலையைத் திணிக்கும்
உழைப்புக்கான ஊதியம் மறுககும்
உலகமயமாக்க தாக்கத்தில் இன்று
கடந்தகாலமாகிக் கொண்டிருக்கிறது
காலம் பல கடந்துவந்த மே தினம்

உழைக்கும் வர்க்கத்துக்கு
உண்மைநிலை உணர்த்தி
உயர வைக்குமா இந்த மே தினம்

உயர்த்தி விடுவோமே நாம்
உயரத்தில் இந்த மே தினத்தில்

இன்று புதிய உறுதி எடுப்போம்
குழந்தைத் தொழில் ஒழிப்போம்
முதுமைத் தொழில் அழிப்போம்
உழைப்பவரை உயர்த்துவோம்
ஊழியரை வாழ்த்துவோம்

இன்று புதிதாய் பிறப்போம்
இந்த மே தினம் கொண்டாடுவோம்

Wednesday, April 29, 2009

குட்டி ஆசைதான், நிறைவேறுமா....?


இரவு கடக்க ஈசலுக்கு ஆசை
இலவு பழுக்க கிளிக்கு ஆசை
நிலவு தாண்ட முகிலுக்கு ஆசை
எழுந்து நடக்க நிழலுக்கும் ஆசை

இருட்டை பார்க்க ஒளிக்கு ஆசை
வளையாமல் இறங்க மின்னலுக்கு ஆசை
உதிராமல் இருக்க மலருக்கு ஆசை
மதியம்வரை இருக்க பனித்துளிக்கும் ஆசை

காலையில் உதிக்க நிலவுக்கு ஆசை
தேய்ந்து வளர சூரியனுக்கு ஆசை
அமாவாசைப் பார்க்க சந்திரனுக்கு ஆசை
மாதமொரு விடுப்பெடுக்க கதிரவனுக்கும் ஆசை

ஒருநாள் ஓய்வெடுக்க பூமிக்கு ஆசை
ஓடாமல் இருக்க ஓடைக்கு ஆசை
நனையாமல் இருக்க குடைக்கு ஆசை
நரைக்காமல் இருக்க முடிக்கும் ஆசை

வேலைமுடிக்க உழைப்பாளர் சிலைக்கு ஆசை
சாலைதாண்ட தலைவர் சிலைக்கு ஆசை
ஓயாமல் அடிக்க ஆலயமணிக்கு ஆசை
தேயாமல் இருக்க செருப்புக்கும் ஆசை


எனக்கும்......

காலைவரை கண்மூடாமல் தூங்க ஆசை
கனவுக்குள் இறங்கி கால்நனைக்க ஆசை
கூட்டுக் குடும்பத்தில் கூடிவாழ ஆசை
காடுவரை கூடவரும் சொந்தம்பார்க்கவும் ஆசை

நல்லதோர் தலைமை பார்க்க ஆசை
நல்லதேர்தல் பார்க்க நெடுநாள் ஆசை
நல்லதமிழ் கேட்க நரம்பெல்லாம் ஆசை
நிலைத்து நிற்கும் செல்வத்துக்கும் ஆசை

நினைத்தது நடக்க நாளெல்லாம் ஆசை
இப்படியே நானிருக்க இன்னும் ஆசை

Sunday, April 26, 2009

இணைய நண்பருக்கு இனிய வேண்டுகோள்...!


தமிழ் இணைய நண்பரே,
தரணி ஆள வந்தோரே !
மனதார வாழ்துக்களை முன் தொடுத்து
மன்னிக்க வேண்டுகிறேன் உங்களிடம் அடுத்து

உண்மைகள் சிலவற்றை உங்களிடம்
உள்ளபடியே சொல்லப் போகிறேன்.
உயர்த்தவேண்டும் நாமிருக்கும் இடம்
உயரவேண்டும் உலகினில் நம்தரம்

மொக்கை என்னும் செக்கினை
சக்கையாய் சுற்றிக் கொண்டிருக்கும்
நமக்குள் நிறைந்தே இருக்கிறது
அள்ள அள்ளக் குறையாத
தேன் அமுதக் கவிதைகள்

சுயமாய்க் கவிபடைத்து
சுயரூத்தைக் காட்டிடும்
சுயம்புகள் எங்கள்
சுந்தரக் கவிகள்

வசதியும் வாய்ப்பும்
வாசலில் இருந்தும்
நேரமும் காலமும்
நெருக்கத்தில் இருந்தும்

ஏனோ மயக்கம்!?
ஏன் இந்தத் தயக்கம்!?

பள்ளம் பாயும் வெள்ளமென
படைப்புகளைத் தாருங்கள் !
எண் விளையாட்டை மறந்து
பண் படைத்திட வாருங்கள் !!

அற்புத பண் திடலில் ஒன்று
அவசர மண் திடலில் ஒன்று
இருகால் பதித்திருக்கிறீர்கள் ஆனாலும்
இருபக்கமும் பார்த்திருக்கிறீர்கள்

அழுத்தம் தருவதைப் பொருட்டே
அதன் இடம் கொண்டு சேர்க்கும்

உங்களின் தேர்வுக்காகக் காத்திருக்கிறேன் !
உள்ளம் நிறைய வாழ்த்தி நிற்கிறேன் !!

Tuesday, April 21, 2009

எப்படி இருக்கும்???.....


யாருமே எழுதாத கவிதை
எவருமே எடுக்காத புகைப்படம்

மண்ணில் வந்துவிழும்
மழையின் முதல் துளி

கடலின் கால்நனைக்கும்
கதிரவனின் முதல் ஒளி

மொட்டு மலராக
இதழ் திறக்கும் நேரம்

கானகக் கருங்குயில்
கானத்தின் ராகம்

வெள்ளை மேகம் ஒன்றுசேர்ந்து
இருட்டாகும் ரகசியம்

இருட்டிலிருந்து வெளிச்சமாய் மின்னல்
வெளியாகும் அதிசயம்

காற்றிலிருந்து காலைப் பனித்துளி
உருவாகும் தருணம்

தொட்டுத் தடவிச் செல்லும்
தென்றலின் உருவம்

என்னவளின் கருவில்
எட்டுமாத உருவிலிருக்கும்
எங்கள் இருவரின் ஓருயிர்

எப்படி இருக்கும் ?
ஏங்கிப்போய் இருக்கிறேன் !
யாருக்காவது தெரியுமா ?

Monday, April 13, 2009

இப்படியும் ஒரு.......!!!!


விடியல் தினமும்
வந்து போனபோதும்
இருள் இன்னும் நீங்காத
இருண்டுபோன தேசம்

ஏன்? எதற்கு?
என்ற கேள்விகள்
தடை செய்யப்பட்டுள்ள
தடுமாறும் தேசம்

எங்கே? எத்தனை பேர்?
என்ற விபரங்கள் மட்டும்
பெருமையாய் வெளியிடும்
போதையிலிருக்கும் தேசம்

கணக்கு காட்ட
தனது மக்களையே
கொன்று குவிக்கும்
குழப்பத்திலிருக்கும் தேசம்

பத்திரிக்கையாளன்
பரபரப்பு செய்திகளை
பத்திரிக்கையில் தெரிந்துகொள்ளும்
பரிதாபமான தேசம்

பத்திரிக்கை சுதந்திரம்
படுகுழியில் தள்ளி
அதிபர் மாளிகை
அன்றைய செய்தி வெளியிடும்
அற்புதம் நிறைந்த தேசம்

சுண்டு விரல்
சூப்பும் பிள்ளையையும்
குப்பி சப்பும் போராளியென
பயந்துபோய் செல்லடிக்கும்
பதட்டத்திலிருக்கும் தேசம்

அபயம் தேடிவரும்
அப்பாவி மக்களையும்
பாதுகாப்பு வலையத்திற்குள்
படுகொலை செய்யும் தேசம்

புள்ளி விபரங்களால்
புளங்காகிதப் பட்டு
புல்லரித்துப் போயிருக்கும்
செல்லரித்த தேசம்

உள்ள நிலவரம் புரியாமல்
உண்மை நிலைமை தெரியாமல்
தன் முதுகை தானே
தட்டிக்கொள்ளும் தேசம்

நாட்டுக்கு உழைக்கும் பிள்ளைகள்
நாளை செயிக்கும் போது
நல்லோர் முன் மண்டியிடப் போகும்
நன்றி கெட்ட தேசம்