Sunday, June 21, 2009

எனக்குள் 32 (அ) 32 க்குள் நான்


எனது அன்பின் அக்கா
திருமதி .பூங்குழலி /மருத்துவர்
அன்பான குடும்பத்தில் 9 மாதம் மூத்தவர்
அடுத்தவரை முன்னிருத்துவதில் முதன்மையாய் இருப்பவர்
என்னை இந்தப் பதிவுக்காக முன்மொழிந்தவர்
- அவருக்கு எனது நன்றி கலந்த வணக்கங்களுடன் ஆரம்பிக்கிறேன் !

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு இந்தப் பெயர் பிடிக்குமா?
#)எனது பெற்றோருக்கு மிகநீண்ட காத்திருத்தலுக்குப்பின் (6 ஆண்டுகள்), தொடர்ந்து 3முறை குலதெய்வத்தின் பெயர் வைப்பதாக வேண்டிக்கொண்டபின் பிறந்ததால் எனக்கு குலதெய்வம் பெயர் சேர்த்து உச்சிமகாளி துரை என்று பெயர்சூட்டப்பட்டது. அடுத்து தம்பிக்கும் அதே பெயர்.அப்பொழுது "வசந்த மாளிகை" தாக்கம் இருந்த நேரம்.கூப்பிடும் வசதிக்காக நான் 'பெரிய துரை' ஆனேன்,தம்பி 'சின்ன துரை'ஆனான்.

#)'துரை 'பிடிக்ககாம இருக்குமா !


2. கடைசியாக அழுதது எப்பொழுது?
#)எனக்குத் தெரிந்து ஒரேஒருமுறை - எனது தந்தையின் மரணத்தில்.
எனது குழந்தை பருவத்தில்,ஏழ்மை நிலையில் எங்களுக்காகவே உழைத்து,உழைப்பையே சுவாசித்து,உழைப்பை மட்டுமே அனுபவித்தவர்.அவர்பிறந்த கிராமத்து மண் மீது அதிக பிடிமானம் உள்ளவர்.அவருக்காக கிராமத்தில் பண்ணைவீடு, சுற்றிலும் தோட்டம் எனற எனது கனவு திட்டத்தில் மிக உறுதியாக இருந்தேன்.நான் சம்பாதிக்க ஆரம்பித்து,வீட்டு கட்டிட வேலை ஆரம்பிக்கும் தருணத்தில் திடீரென மறைந்துபோனார், எதையுமே அனுபவிக்காத எனது அப்பா ...


3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?
#)ஆமாம்.எனக்கு மிகவும் பிடிக்கும்.எனது ஆங்கில எழுத்து அந்தக்கால மைக்குடுவை/மயிலிறகால் எழுதுவார்களே ! கிட்டத்தட்ட அதுபோல இருக்கும் (இதற்காகவே பேனா வாங்கியவுடன் நிப்பை சிறிது சாய்த்துவைத்து, தரையில் மெதுவாக தேய்த்து,பட்டையாக எழுதுவதற்கு தயார் செய்வேன்.எப்படியும் ஒரு நாள் ஆகிவிடும் ).
இதில் ஒரு தவிர்க்கமுடியாத சிக்கலும் உண்டு.இன்றுவரை (எனது,அக்கா,தங்கை)குழந்தைகளுக்கும் புத்தகமுகப்பு எழுதுவதில் ஆரம்பித்து,அட்டைபோடும்வேலைவரை மெதுவாக என்தலையில் ஏற்றிவிட்டுவிட்டார்கள்
#)எனது கையெழுத்து (signatute) பார்ப்பதற்கு கொக்கு ஒற்றைக்காலில் தவம் நிற்பது போலிருக்கும் :)

4. பிடித்த மதிய உணவு என்ன?
#)இதுதான் எனக்கு சரியாகக் கிடைப்பதில்லை.பயணத்திலேயே அதிக நேரம் இருப்பதால் பெரும்பாலும் வெளியே கடைகளில் சாப்பிடுவதை தவிர்த்துவிடுவேன்.எவ்வளவு நேரம் ஆனாலும் வீடுபோய் சேர்ந்தபிறகுதான்/என்னவாக இருந்தாலும்.

5. நீங்கள் பார்த்தவுடன் யாருடனாவது உடனே நட்புக் கொண்டாடக் கூடியவரா?
#)எனக்கும் ஆசைதான்.ஆனால் முதல்சந்திப்பு பெரும்பாலும் அறிமுகத்துடனேயே முடிந்து விடுகிறது.(பயம்/மரியாதை).ஆனால் தொடர்ந்தது எல்லாமே இதுவரை தொடர்ந்துகொண்டேதான் .....

6. கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
#)கடல் குளியல் பிடிக்கும்.கடல்சார்ந்த ஊரில் இருப்பதால் இது எளிதாகவும் கிடைக்கும்
அருவியில் குளிக்க மிகவும் ஆசை.நாளிதழில் ஆர்ப்பரிக்கும் அருவியின் (குற்றாலம்) படம் பார்த்து,உடனடியாக அவசரத்திட்டம் போட்டு ,ஆர்ப்பாட்டமாய் அங்கேபோய் நின்றால் எல்லோரும் எண்ணையில் குளித்துவிட்டு சொம்பு வைத்து தண்ணீர்பிடிக்க வரிசையில் காத்திருப்பார்கள் :(.ஆறுதலுக்காக தாமிரபரணியில் (திருநெல்வேலி)குளித்துவிட்டு வருவோம் !

7. முதலில் ஒருவரைப் பார்க்கும்போது எதனைக் கவனிப்பீர்கள்?
#)அவர் என்னிடம் என்ன கவனிக்கிறார் என்பதை

8. உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விடயம் என்ன? பிடிக்காத விடயம் என்ன?
#)பிடித்தது - எது நடந்தாலும் நல்லதே என ஏற்றுக்கொள்வேன்
(சில சமயங்களில் மனது சங்கடத்துடன்)
#)பிடிக்காதது - நான் விழிக்கும் முன் சூரியன் உதிப்பது :(

9. உங்கள் பாதியிடம் உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத விடயங்கள் என்ன?
#)பிடித்தது - எனக்கு பாதி இடம் கொடுத்தது (50%)
#)பிடிக்காதது - பாதி கொடுத்துவிட்டு முழுவதுமாய் ஆக்கிரமித்தது (100%)

10. யார் பக்கத்தில் இல்லாமல் இருப்பதற்காக வருந்துகிறீர்கள்?
#)அப்பா

11. இதை எழுதும்போது என்ன வண்ண ஆடை அணிந்திருக்கிறீர்கள்?
வெள்ளை பனியன்/நீலநிற கட்டம்போட்ட கைலி (வீட்டில் இருக்கிறேன் !)

12. என்ன பாட்டு கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
இல்லை.ஹாலில் ஏதோ படம் ஓடிக்கொண்டிருக்கிறது :(

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக மாற உங்களுக்கு ஆசை?
#)பச்சை

14. பிடித்த மணம்?
#)சமையல் அறையிலிருந்து வெளியே 'வரும்' என்னவளின் வாசம்

15. நீங்கள் அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களைப் பிடித்து உள்ளது? அவர்களை அழைக்கக் காரணம் என்ன?
#)சீனா
#)கிம
#)நாகரா
#)தமிழன்
#)நடராஜன்
#)ராஜா
ஒவ்வொருவரும் தனித் தன்மை வாய்ந்தவர்கள்

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
#)அவரின் எல்லா பதிவும் பிடித்தவைதான்.அனைத்துமே சம்பந்தப்பட்டவரை முன்னழைத்துச் செல்லுவதாகவே இருக்கும்

17. பிடித்த விளையாட்டு?
#)குழந்தைகளை ஏமாற்றி விளையாடுவது

18. கண்ணாடி அணிபவரா?
#)இல்லை

19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
#)இயற்கை சார்ந்த (காட் மஸ்ட் பி க்ரேஸி,அபோகலிப்டா)
அறிவியல் சார்ந்த (ரிட்டன் ஆப் த ஜெடாய்,ஈ.டி,ஏலியன்/ப்ரிடேட்டர்)
உளவியல் சார்ந்த (அன்பே சிவம்,அஞ்சலி)
படங்கள் அத்தனையும்

20. கடைசியாகப் பார்த்த படம்?
#)பசங்க- அந்த 'குஞ்சுமணி' என்னை மிகவும் கவர்ந்தது :)

21. பிடித்த பருவகாலம் எது?
#)இப்போ இருக்கும் ( 8x8ல் 5ம் பாகம் ie 32 - 40 ) காலம்தான் !
#)மழை(க்காலமும்) ரொம்பப் பிடிக்கும் !!


22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
#)கணிதம் (பசங்க சந்தேகம் தீர்ப்பதற்காக . தெரியவில்லை என்று சொன்னால் கிண்டல் செய்கிறார்கள்!!!!!)

23. உங்கள் டெக்ஸ்-டொப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு தடவை மாற்றுவீர்கள்?
#)கணக்கு வைத்துக்கொள்வதில்லை

24. உங்களுக்குப் பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
#)பிடித்தது :மிஸ்டு கால் - வீட்டிலிருந்து வருவது :)
#)பிடிக்காதது :மிஸ்டு கால் - மற்றவரிடம் இருந்து வருவது :(

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்சத் தொலைவு?
#)மன ரீதியாக இதுவரை இல்லை
உடல் ரீதியாக டெல்லி,மும்பை

26. உங்களுக்கு ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
#)உங்களை இதை படிக்கவைத்திருக்கிறேன் :)

27. உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்?
#)பொய்,பொய் மட்டுமே

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் ஒரு சாத்தான்?
#)காலைநேரத் தூக்கம்/சோம்பல்

29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
#)என் வீடு தான்

30. எப்படி இருக்கவேண்டுமென்று ஆசை?
#)இப்படியே

31. மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
#)ஆகா !
கடைசியில் ஒரு நாரதர் கேள்வி !!
இட ஒதுக்கீட்டில் என்நிலை (100%) மிக மோசமான நிலையில் இருப்பதால் அப்படி ஏதாவது செய்தாலும் தெரிந்துவிடும் :(

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்கள்.
#)கிடைத்ததோடு மனமொன்றி வாழுங்கள் - இதுவரை
கிடைக்காததெல்லாம் கேட்காமலேயே கிடைக்கும்.

என்றும் அன்புடன்
-துரை.ந.உ

Saturday, June 20, 2009

சமஉரிமை என்பது......


"மிருகவதை செய்யும் மனிதர்களை
மாறுகை மாறுகால் வாங்குவோம்

பறவைகளை கூண்டில் வளர்க்கும்
கயவர்களை கூண்டில் அடைப்போம்"

கடையின்முன் மறியல் செய்து
கூட்டமாய்க்கூடி ஆர்ப்பாட்டம் செய்து
கூடுகளை உடைத்து பறவைகளை
கூண்டோடு பறக்க விட்டோம்

கிளியும் மைனாவும் திசைக்கொன்றாய்
களிப்புடனே பறந்து மறைந்துபோயின
கைதட்டி ஆரவாரமாய் ஆர்ப்பரித்தோம்

புறாவெல்லாம் கூட்டமாய்ப் பறந்து
திறந்துவிட்டக் கூட்டுக்கேத் திரும்பிவந்தன
திறந்தவாய் மூடாமல் திகைத்து நின்றோம்

குருவிகள் சிலநொடி நேரத்திலேயே
பருந்திடம் சிக்கி பரதேசம் போயின
இருண்ட முகத்துடன் உறைந்து நின்றோம்

காதல்பறவைகள் கண்முன்னாலேயே
கழுகிடம் மாட்டி சிதைந்தே போயின
அதிர்ந்துபோய் முழுதும் மூர்ச்சையாகி நின்றோம்

நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த
நடுநிலையாளர் மெதுவாய்ச் சொன்னார் :
"கூண்டிலாவது அது உயிரோடிருந்திருக்கும்"

தலைகுனிந்து அத்தனைபேரும்
நிலைகுலைந்து கலைந்து சென்றோம்

"எல்லோருக்கும் சமமான அளவுகோல்
எல்லாசமயத்திலும் சரியாய் வராதோ ?
வகைப் படுத்திப் பார்ப்பதுதான்
வாழ்க்கைக்கு உதவும் பாடமோ ??"

Friday, June 19, 2009

அருக்காணிக் காதல்...!



"நார் இல்லாமல் மலர் _ ஆரம் ஆகுமா ?
வேர் இல்லாமல் மரம் _ மலர் கொடுக்குமா ?
நீர் இல்லாமல் உரம் _மரம் சேருமா ?

நீர் இல்லாமல் வேர் _மரம் வளர்க்குமா ?
நீர் இல்லாமல் மோர் _தனியே இருக்குமா ?
நீர் இல்லாமல் பார் _தாகம் தணிக்குமா ?

நீர் தராமல் வானகம் _தூங்கி இருக்குமா ?
நீர் இல்லாமல் கானகம் _ஓங்கி வளருமா ?
நீர் இல்லாமல் என்காதல் _ .................... !!"



ஆகா சொல்லிப்புட்டேனே !!!!!!!!!!!!!!.............

அவசரத்தில சொல்லிபுட்டேனே !
அவருகிட்டேயே சொல்லிப்புட்டேனே !

என் காதல சொல்லிப்புட்டேனே !
எதிர்பாக்காம சொல்லிபுட்டேனே !

என் காதல் கண்டிருப்பாரோ - என்மேல்
எதிர்காதல் கொண்டிருப்பாரோ ?

ஆசையா இருக்கேன் நான் அவருமேலே !
அடக்க முடியுமா இனியும் என்னால ?

காத்திருக்கும் சேதியச் சொல்லுங்க அவுகளுக்கு
கோயில் கட்டியேக் கும்புடுதேன் உங்களுக்கு

Monday, June 15, 2009

இணைப்பு இருந்தால் இல்லாள் விடுவாளா...!


"கண்ணு முன்னால நாங்க
கண்டுக்கவே இல்ல நீங்க
நாங்கஇங்க உன்னைத்தானே நம்பியுள்ளோம்
எங்கெங்கோ அலையுதே உன்னோட உள்ளம்"


'' இப்போ என்ன நடந்................''

''குத்துக்கல்லப் போல உக்காந்துகிட்டு
உத்தஉத்துப் எதையோப் பாத்துக்கிட்டு
இல்லாத ஆளுகிட்டே நாள்கணக்கா
நல்லாத்தான் பேசுதீங்க''


'' அப்படி எல்லாம் ஒன்...........''

''தன்னந்தனியா சிரிச்சுக்கிறீங்க
தனக்குள்ள என்னவோ பேசிக்கிறீங்க
இஞ்சிதின்னக் கொரங்காட்டம் இளிக்கிறீங்க
மஞ்சதெளிச்ச ஆடாட்டம் முழிக்கிறீங்க''


'' இல்லாதத எல்லாம் சொல்லக்..........''

''தொடுப்பு அதை விரைவிலேயே
எடுத்துவிட்டே ஆகணும் - அப்பத்தான்
அடுத்தவேலையப் போய்ப் பாப்பீங்க
எடுத்த வேலையயும் முடிப்பீங்க''


'' இதெல்லாம் ரொம்ப அதிக.........''

''இண்டர்நெட்டே வேணாம் நமக்கு
இன்றேவெட்டு வேணும் அதுக்கு
அது இருந்தா நாங்க எதுக்கு
எதுவேணும் இப்போ உமக்கு''


"...............?!?!?!?!................"

இதுஎப்படி இருக்கு நண்பா உனக்கு ?
இதுக்குத்தான் இந்தப்பாட்டு எனக்கு !
எதுசொன்னாலும் ஏறமாட்டேங்குதே
ஏறின கோவமும் இறங்கமாட்டேங்குதே

என்ன செஞ்சி சமாளிக்கலாம் ?
எது சொல்லி சமாதானப்படுத்தலாம் ?
பரிசா நகை எடுத்துப் கொடுக்கலாமா ?
பெரிசாக கதை எடுத்து விடலாமா ?

??????????????????????????????????????
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!?????????????????????!
@#$%^&*()^%$ஃஃ***&(()))*&%!!#@$@@@#@!^

"படாதபாடு பட்டுக்கிட்டு இருக்கேன் இங்கே
படிச்சுப் போட்டு சிரிக்கிறீங்க அங்கே
கடவுள மாதிரித்தானே நீங்க
காப்பாத்த இங்க உடனே வாங்க

எங்கே இருந்து வாரீங்கன்னு
இங்கே வந்து சொல்லீராதீங்க
உங்களையும்தான் சேத்துத் தேடுறாங்க
தன்னால வாயக்கொடுத்து மாட்டீறாதீங்க"

Sunday, June 14, 2009

குழந்தைத் தொழில் - போராடினால் மட்டும்..!?!?


ஆறு மணிக்கே எந்திருச்சி குளிச்சி
அறக்கப்பறக்கக் கெளம்புறான் நம்ம குமாரு

"எட்டரை மைலு சைக்கிளு மிதிக்கணும்
எட்டு மணிக்கு கேட்டுக்குள்ளப் போகணும்

வாசலக் கூட்டித் தெளிக்கணும்
வத்தி கொளுத்தி வைக்கணும்
கக்க்கூச நல்லாக் கழுவணும்
கறை போகத் தேய்க்கணும்

அய்யா ரூம்பக் கூட்டணும்
ஆபீசு ரூம்பப் பெருக்கணும்
தேறுறப் பேப்பரை வகுக்கணும்
தேவையில்லாதத கழிக்கணும்

காரைக் கழுவித் தொடைக்கணும்
ஏரை நல்லாப் புடிக்கணும்
காப்பி வாங்கிக் கொடுக்கணும்
க்ளாசும் அலசி வைக்கணும்

பைல அடுக்கி வைக்கணும் -- அந்த
பயலயும் வேலை வாங்கணும்
தூசி தட்டி அடுக்கணும் -- பேப்பரு
ஓசி வாங்கிக் கொடுக்கணும்

இன்னிக்கு ஒருநாள் ஓட்டி(OT) பாக்கணும்
நாளைக்கு அரைநாள் ஓடி(OD) கேக்கணும்

பள்ளிக்கூடம் தொறந்தாச்சு
பாடப்பொஸ்தகம் வாங்குறதுக்கு
எட்டாங்கிளாசில அக்காவ
எட்டுமணிக்கே கொண்டு விடணும்

அப்புறமா
ஓட்ட டவுசர தைக்கணும்
ஓட்டப் பல்ல மறைக்கணும்
அந்துபோன செருப்பத் தைக்கணும்
ஆத்துலயும் முடிஞ்சாக் குளிக்கணும் "


"குழந்தைத் தொழில் ஒழிப்போம்"

கேட்டுக்கு வந்திட்டாரு நம்ம குமாரு
கவனமாக் கேக்காரு நம்ம குமாரு
கூட்டமாக் கத்திக்கிட்டிருக்கிற நம்மள
கேவலமா பாக்காரு நம்ம குமாரு

"குழந்தைத் தொழில் ஒழிப்போம்"

நல்லவழி காட்டப் போராடுர
நம்ம சொல்லெதுவும் கேக்காம
நம்மளத் தாண்டிக் கேட்டுக்குள்ள
நிக்காமப் போய்ட்டாரு நம்ம குமாரு

"குழந்தைத் தொழில் ஒழிப்போம்"

எதுவோ சரியில்லயே !
என்னான்னு புரியலியே !!
கோசத்தில தப்பிருக்கா இங்க ?
குழம்பிப்போய் நின்னோம் நாங்க .

அப்பத்தானே தெரிஞ்சது
அந்த உண்மையது புரிஞ்சது !

நம்ம நாயகரு குமாரு
நிக்காமப் போனது நமக்கு
உண்ம நிலையத உரைச்சது - அந்த
உண்ம நிலவரம் உறைச்சது

குழந்தைத் தொழில் ஒழித்துவிட்டால்
குடிக்கும் கூழுக்கவன் என்ன செய்வான் ?!

அடுத்தவேளை சோற்றுக்கு
அவன் வீட்டில் அடுப்பெரிய
ஆவன செய்தால் தானே
அவன் தொழிலை நிறுத்துவான்

அந்தவேளை உடனே வரவேண்டும்
அரசாணையும் நிறைவேறவேண்டும் !
அவன் வாழ்வும் வளம்பெறவேண்டும் !!
அதற்கு யார் மனசு வைக்கவேண்டும் ?

அரசியல்வாதியா -- இல்லை
அந்த ஆண்டவனா !?!?!

ஜுன் 13
குழந்தைத் தொழில் ஒழிப்பு தினம் !

ஜுன் 13
அடுத்த ஆண்டும் உண்டு !?

Wednesday, June 10, 2009

சொன்னா நான் இருப்பேனா....!


அன்பே உருவான தலாய்லாமா
தன்னைக் காக்க தலைமறைவாய் இருக்கிறார்

அன்பைப் போதிக்கும் போப்பாண்டவர்
குண்டுதுளைக்காத வாகனத்தில் வருகிறார்

விடுதலைப் போராட்டத் தியாகி
விதியைநொந்து வீதியில் நடக்கிறார்

பொதுநலச் சேவை செய்பவர்
படிக்கட்டுப் பயணம் செய்கிறார்

கந்து வட்டி வசூலிப்பவர்
கல்வித் தந்தையாக இருக்கிறார்

கட்டைப் பஞ்சாயத்து செய்பவர்
கடவுள் போலவே காட்சி தருகிறார்

நல்லவன் நாணயமானவன் நாயாய்
நடுத்தெருவில் அலைகிறான்

தடி எடுத்தவன் எல்லாம்
தலைவனாகிக் கொண்டிருக்கிறான்

தட்டிக்கேட்கவேண்டிய இந்நாட்டு மன்னர்கள்
தட்டிக்கழித்துக் கொண்டே இருக்கிறார்கள்

"கடமை கண்ணியமுன்னு பாக்கிறவன்
கஞ்சிக்கே வழியில்லாம வாரான்

களவானிப்பயலுவ காலிப்பயலுவ
காப்பிக்குடிக்க கனடாவுக்கே போறான்

இதச் சொன்னதுக்கே உயிரு போயிரும்போல
இதுக்கும்மேல இன்னும் என்னாத்தச் சொல்ல

ஆத்தாடி அம்புட்டுதேன்
இப்போதைக்கு அம்புட்டுதேன் !"

Monday, June 8, 2009

அறுபதானாலும் ஆண்டவன் கூடவே இருப்பார்..!


பெற்றபிள்ளைகளின் ஆசையையும்
பேரப்பிள்ளைகளின் இம்சையையும்
சுற்றங்களின் யோசனையையும்
தவிர்க்க முடியவில்லை

அறுபதாம் கல்யாணம் முடிந்து
அன்று இரவு முதலிரவுபோல்
அமர்க்களமான ஏற்பாடு
எதிர்க்க முடியவில்லை

அந்தவயதிலும் வெட்கப்படும்
அவள்முகம் பார்க்க ஆசையாய்
அறைக் கதவினைத் திறந்தவன்
அப்படியே அதிர்ந்து நிற்கிறேன்
எதிரே நிலைமை சரில்லை

கலைந்து கிடக்கிறது எனது
கடந்தகால நாட்குறிப்பேடுகள்
தலை கவிழ்ந்திருக்கும் அதுபோலவே
நிலைகுலைந்து இருக்கிறேன்
எதிர்பார்க்கவே இல்லை

அவள் கைகளில் விரிந்தநிலையில்
அந்த கருப்புவெள்ளைப் புகைப்படம்

நான்காக மடிக்கப்பட்டிருந்த படம்
நன்றாக சிறகுகள் விரித்து எழுந்து
என்மனப் பறவையோடு சேர்ந்து
பின்னோக்கிப் பறக்கிறது
பல்லாண்டுகள் கடக்கிறது

பன்னிரண்டு வயதினில்
பள்ளி செல்லுகையில்
பாதையினில் கண்டெடுத்தேன்
கோதையவளின் புகைப்படம்

கலையான முகம்பார்த்து
களையானது என்மனது
மலைத்து நின்ற எனக்குள்
கலைந்துவிட்ட மனதுக்குள்

கலைத்துவிட்டவள் எளிதாய்
நுழைந்து இடம் பிடித்துவிட்டாள்
சிலையாய் தடம் பதித்துவிட்டாள்
நிலையாய் இன்றுவரை இருந்துவிட்டாள்

அன்னாளில் மனதில்அவள் நுழைந்ததநாளே
பின்னாளில் எனது மணநாளாகிப்போனது
மணநாளெல்லாம் என்மனது உடைந்து
ரணகளமாகிப் போயிருக்கும்

நிழலைக் காதலித்து வருவதும்
நிஜத்திடம் மறைத்து வாழ்வதும்
மடத்தனமென அறிவுக்குத் தெரிந்தாலும்
மறந்துவிட மனதுக்கு முடியவில்லை

தன்னிரு கைக்குள் புதைந்திருந்த
புகைப்படத்துக்குள் மூழ்கியிருந்தவள் முன்
தண்டனையை ஏற்கத் தயாராக
மண்டியிட்டு தலைகுனிந்து நான்

"எனது குழந்தைப்பருவப் படம்
எப்படி கிடைத்தது உங்களுக்கு ?!"


ஒரேயொரு கேள்வி வந்துது அவளிடமிருந்து
ஓராயிரம் விடைகள் கிடைத்தது அதிலிருந்து
ஒருநொடியில் வெடித்துவந்தேன் தெளிவாய்
மறுபடியும் பிறந்துவிட்டேன் புதியதாய்

நிழல் இங்கே நிஜமாகிப்போனது !
நிழலும் நிஜமும் ஒன்றாகிப்போனது !
உண்மைக்காதலுக்கு என்றென்றும்
ஆண்டவன் அவனின் துணை இருக்கும் !!
அந்தம் முன் அதுதான் செயிக்கும் !!!

முதன்முதலாய் வெட்கத்தோடு நான் !
முதலிரவும் இன்றுதான் எங்களுக்கு !!



நன்றி:கரு/sms நண்பர்கள்

Sunday, June 7, 2009

நெனப்புதான் இப்போ பொழப்ப...!


ஊரே காத்திருக்கிறது அவளின்
ஓரவிழிப் பார்வைக்கு - அவளோ
ஆற்றங்கரைக்கு வரச்சொல்லி
ஆள் அனுப்பியிருக்கிறாள் எனக்கு

விடுமுறையை கழிக்கவந்த இடத்தில்
விருந்துண்டு களிக்க வாய்ப்பா !
கரும்பைக் கையில் கொடுத்து
கருத்தும் கேட்டு வைப்பார்களா !!

தரைத் தொட்டநாளில் அவளால்
தரை தட்டிப்போனதென் உதயம்
தரை தட்டிப்போன நாள்முதலாய்
கரை தாண்டத்துடிக்குதென் இதயம்

இரவில் கனவில்வந்த அவளால்
பகலில் உணர்வில் உயிரில்லை
பகலிரவு பேதம் தெரியவில்லை - இது
யாகமா யோகமா புரியவில்லை

வரச்சொல்லி இருக்கிறாளே !
வரமெதுவும் தருவாளா ?
விரும்புவதாய்ச் சொல்வாளா ??
வேண்டுகோளாய் விடுப்பாளா ???
காதலைக் கொடுப்பாளா -அல்லது
கண்டுகொள்ளாமல் இருப்பாளா ????

"ஆற்றின் வாசம் உணர்ந்தது மனசு
அதிரத் தொடங்கியதென் உசுரு
தடுமாறத் தொடங்கியதென் கையும்காலும்
தடம்மாறாமல் போய்ச்சேரணுமே நானும்"


இதோ வந்துசேர்ந்துவிட்டேன் இக்கரையில்
அதோ அவள்மட்டும் தனியே அக்கரையில்

ஆழமான நீரில் முழுவதுமாய்
மூழ்கிக் கொண்டிருக்கிறாள் அவள் !
தாமதமான என்வரவால்
தவறான முடிவுக்கு போகிறாளா ?

அதுவரை இருந்தநிலை மறந்து
அரைகுறை நீச்சலில் விரைந்து
அக்கரை நோக்கிப் பறக்கிறேன் !
அவளைக் காக்கத் துடிக்கிறேன் !!

அரைநொடி இடைவெளியில்
மறைந்துவிட்டாள் கண்ணிலிருந்து
உதிரம் முழுதும் ஒருநொடியில்
உலர்ந்துவிட்டது உடலிலிருந்து

இனிநான் இருந்தென்ன செய்ய
இதற்குத்தானா இத்தனை நா............
.....................................


அடடா !
அப்போதுதான் அதைக் கவனிக்கிறேன்
அக்கரையில் தலை துவட்டியபடி
அவள் தெளிவாய்த்தான் இருக்கிறாள் !!

அடச்சே !!
தண்ணீருக்கு நடுவில் நான்
தவிட்டுக் கோழிபோல நிற்கிறேன் !
எப்படி இருந்த நான்
இப்படி ஆயிட்டேனே !!

Saturday, June 6, 2009

சுபயோக சுபதினத்தில்....!


அரங்கம் முழுதும் நிரம்பிப்போய் இருக்கிறது
அனைவர் முகமும் குழம்பிப்போய் இருக்கிறது
பதட்டமாய் இருக்கிறார்கள் இருவீட்டாரும்
பலதிட்டம் தீட்டியிருக்கிறார்கள் இதுவரையும்

வழிமேல் விழிவைத்து
வாசல்நோக்கிப் பாத்திருக்கிறார்கள்
நல்லசேதி வருமென்று
நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்

நல்லநேரம் இதோ முடியப்போகிறது
நாற்பது நொடிதான் மிச்சமுமிருக்கிறது

மங்களகரமான 1184ம் ஆண்டு
சர்வதாரி வருடம்
சித்திரைமாதம் 19ம் தேதி
(ஏப்ரல்மாதம் 1ம் தேதி)
ஞாயிற்றுக்கிழமை அன்று
அமிர்தயோகமும்
ரேவதி நட்ச்சத்திரமும் கூடிய
சுபயோக சுபதினத்தில்
காலை 11.00 -- 12.00 மணிக்குள்
மேச லக்கனத்தில்
இருவீட்டார் சம்மதத்துடன்
பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது இது

சிலநாள் தள்ளிவைக்க வாய்ப்புகள் இருந்தும்
நல்லஅரங்கம் கிடைக்காத காரணத்தால்
அமைந்த அரங்கில் நடத்திக்கொள்ள
அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பட்டது இது

வருபவர்களுக்கு வசதியாக
விடுமுறைநாளில் நிச்சயிக்கப்பட்டது இது

மாலை விருந்துக்கும் மதிய உணவுக்கும்
மலை அளவுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது
நல்லநேரம் தாண்டிவிடுமோ? தொடரும்
நிகழ்ச்சிகள் யாவும் தடைபட்டுவிடுமோ??

வாசல் திறந்து வருகிறார் மருத்துவர்
"ஆண்குழந்தை" என்கிறார்
நல்ல நேரம் தாண்டும் முன்
நல்லசேதி சொல்லிவிட்டார்

எங்கள் வீட்டு வசந்தத்தை
எங்களுக்கு வசதியான நாளில்
எங்கள் வீட்டுக்கு வரவழைத்துவிட்டோம் !
"எங்கே இனிப்பு ?!,இங்கே வாருங்கள் !!"

Friday, June 5, 2009

இதுவும் வரதட்சணை கொடுமை....?!


நின்றே போய்விட்டது எனது
நிச்சயதார்த்தமும் திருமணமும்

சாதகம் பாதகம் பார்த்து
சாதகப் பொருத்தமும் பார்த்து
'சரூராக' நடந்த நிச்சயதார்த்தம்
சட்டென நின்று போனது

வரதட்சணையென பெண்வீட்டாரிடம்
வைத்தஒரு கோரிக்கையால்
நட்டநடுக் கூடத்தில் நானே
காட்சிப்பொருளாக ஆகிப்போனேன்

புயலின் சுழல்மையத்தில் நான்
பரிதவித்துப்போய் இருக்கிறேன்
சுற்றிலும் சுழற்றி அடித்துகொண்டிருக்கிறது
வார்த்தைகள் சுடும் சூறாவளியாய்

"மாப்பு நல்லாத்தானே இருக்காரு ?
"மப்பா'' என்னன்னவோ சொல்லுதாரு !"

"நிச்சயத்துக்கு முன்னாடி பையனப்பத்தி
அக்கம்பக்கம் ஏதாவது விசாரீச்சீயளா?????"

"சம்பந்தம் இதெல்லாம் இனிமே
சரிப்பட்டு வராப்ல தெரியலியே !"

"தொடுப்பு எதையும் வச்சிருப்பான்யா !
குடியும் கூத்தையும் மறைச்சிருப்பான்யா !!"

"எதையோ ஒளிக்கிறாங்கடே !
தெசையத் திருப்புராங்கடே !!"

"கண்ணுல குறை இருக்குமோ ?
நெஞ்சில தடை இருக்குமோ ??"

"வீட்டுக்குள்ள ஏதோ வழுக்கல் இருக்கும்போல !
குடும்பத்துல ஏதோ சிக்கல் இருக்கும்போல !!"

சாட்டையாய் நாவினால் விளாசுகிறார்கள்
சாடையாய் அள்ளி வீசுகிறார்கள்

"@#$%^&*()
அட ஆண்டவனே !

அப்படி என்னதான் நான்
அதிகப்படியாய்க் கேட்டுவிட்டேன் !!
வரதட்சணை வேண்டாம் என்றதற்கேன்
வானம்வரைக் குதிக்கிறார்கள் ?!!!"

என்நிலை எனக்கு
இன்னும் புரியவில்லை...........?!?!?!

நண்பா உனக்கு ?