Sunday, June 7, 2009

நெனப்புதான் இப்போ பொழப்ப...!


ஊரே காத்திருக்கிறது அவளின்
ஓரவிழிப் பார்வைக்கு - அவளோ
ஆற்றங்கரைக்கு வரச்சொல்லி
ஆள் அனுப்பியிருக்கிறாள் எனக்கு

விடுமுறையை கழிக்கவந்த இடத்தில்
விருந்துண்டு களிக்க வாய்ப்பா !
கரும்பைக் கையில் கொடுத்து
கருத்தும் கேட்டு வைப்பார்களா !!

தரைத் தொட்டநாளில் அவளால்
தரை தட்டிப்போனதென் உதயம்
தரை தட்டிப்போன நாள்முதலாய்
கரை தாண்டத்துடிக்குதென் இதயம்

இரவில் கனவில்வந்த அவளால்
பகலில் உணர்வில் உயிரில்லை
பகலிரவு பேதம் தெரியவில்லை - இது
யாகமா யோகமா புரியவில்லை

வரச்சொல்லி இருக்கிறாளே !
வரமெதுவும் தருவாளா ?
விரும்புவதாய்ச் சொல்வாளா ??
வேண்டுகோளாய் விடுப்பாளா ???
காதலைக் கொடுப்பாளா -அல்லது
கண்டுகொள்ளாமல் இருப்பாளா ????

"ஆற்றின் வாசம் உணர்ந்தது மனசு
அதிரத் தொடங்கியதென் உசுரு
தடுமாறத் தொடங்கியதென் கையும்காலும்
தடம்மாறாமல் போய்ச்சேரணுமே நானும்"


இதோ வந்துசேர்ந்துவிட்டேன் இக்கரையில்
அதோ அவள்மட்டும் தனியே அக்கரையில்

ஆழமான நீரில் முழுவதுமாய்
மூழ்கிக் கொண்டிருக்கிறாள் அவள் !
தாமதமான என்வரவால்
தவறான முடிவுக்கு போகிறாளா ?

அதுவரை இருந்தநிலை மறந்து
அரைகுறை நீச்சலில் விரைந்து
அக்கரை நோக்கிப் பறக்கிறேன் !
அவளைக் காக்கத் துடிக்கிறேன் !!

அரைநொடி இடைவெளியில்
மறைந்துவிட்டாள் கண்ணிலிருந்து
உதிரம் முழுதும் ஒருநொடியில்
உலர்ந்துவிட்டது உடலிலிருந்து

இனிநான் இருந்தென்ன செய்ய
இதற்குத்தானா இத்தனை நா............
.....................................


அடடா !
அப்போதுதான் அதைக் கவனிக்கிறேன்
அக்கரையில் தலை துவட்டியபடி
அவள் தெளிவாய்த்தான் இருக்கிறாள் !!

அடச்சே !!
தண்ணீருக்கு நடுவில் நான்
தவிட்டுக் கோழிபோல நிற்கிறேன் !
எப்படி இருந்த நான்
இப்படி ஆயிட்டேனே !!

No comments: