Saturday, June 6, 2009

சுபயோக சுபதினத்தில்....!


அரங்கம் முழுதும் நிரம்பிப்போய் இருக்கிறது
அனைவர் முகமும் குழம்பிப்போய் இருக்கிறது
பதட்டமாய் இருக்கிறார்கள் இருவீட்டாரும்
பலதிட்டம் தீட்டியிருக்கிறார்கள் இதுவரையும்

வழிமேல் விழிவைத்து
வாசல்நோக்கிப் பாத்திருக்கிறார்கள்
நல்லசேதி வருமென்று
நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்

நல்லநேரம் இதோ முடியப்போகிறது
நாற்பது நொடிதான் மிச்சமுமிருக்கிறது

மங்களகரமான 1184ம் ஆண்டு
சர்வதாரி வருடம்
சித்திரைமாதம் 19ம் தேதி
(ஏப்ரல்மாதம் 1ம் தேதி)
ஞாயிற்றுக்கிழமை அன்று
அமிர்தயோகமும்
ரேவதி நட்ச்சத்திரமும் கூடிய
சுபயோக சுபதினத்தில்
காலை 11.00 -- 12.00 மணிக்குள்
மேச லக்கனத்தில்
இருவீட்டார் சம்மதத்துடன்
பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது இது

சிலநாள் தள்ளிவைக்க வாய்ப்புகள் இருந்தும்
நல்லஅரங்கம் கிடைக்காத காரணத்தால்
அமைந்த அரங்கில் நடத்திக்கொள்ள
அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பட்டது இது

வருபவர்களுக்கு வசதியாக
விடுமுறைநாளில் நிச்சயிக்கப்பட்டது இது

மாலை விருந்துக்கும் மதிய உணவுக்கும்
மலை அளவுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது
நல்லநேரம் தாண்டிவிடுமோ? தொடரும்
நிகழ்ச்சிகள் யாவும் தடைபட்டுவிடுமோ??

வாசல் திறந்து வருகிறார் மருத்துவர்
"ஆண்குழந்தை" என்கிறார்
நல்ல நேரம் தாண்டும் முன்
நல்லசேதி சொல்லிவிட்டார்

எங்கள் வீட்டு வசந்தத்தை
எங்களுக்கு வசதியான நாளில்
எங்கள் வீட்டுக்கு வரவழைத்துவிட்டோம் !
"எங்கே இனிப்பு ?!,இங்கே வாருங்கள் !!"

No comments: