Sunday, July 12, 2009

வாய்தா(ன்) வாய்தான்....!



இல்லாத தாத்தாவுக்கு
இருதயத்தில் அடைப்பென்று
அலுவலகத்தில் அடித்துவிட்டு
அரைநாள் விடுப்புஎடுத்து
மேலாளரைத் தாண்டுவதற்குள்
மேல்மூச்சு வாங்குகிறது

நண்பர்களுடன் சந்திப்பு இன்று
மீன்பிடித்து சமையலுடன்
நல்ல விருந்துண்டு
நடுநடுவே மருந்துமுண்டு

அவசரமாய்க் கிளம்பும்போது
அறைவாசலின் குறுக்கே
தலைசொரிந்து நிற்கும்
நண்பனைப் பார்த்தவுடன்
நிலைமை புரிகிறது.
ஐநூறு கையிலெடுத்து

"ஐந்துகாசு இதற்குமேல்.."
சொல்லி முடிப்பதற்குள்
தட்டிப் பறிக்கிறான் .

"ஐம்பது கேக்கவந்த ஆசாமிக்கு
ஐநூறு அள்ளித்தந்த சாமி நீ"

சொல்லிப் பறக்கிறான்
???????????????????????

சாலை சந்திப்பில்
கையேந்திய பெண்ணிடம்
"உடம்பு நல்லாத்தானே
உனக்கு இருக்கு ?
நல்லா வேலை செய்தால்
நாலுகாசு தானா கிடைக்குமே!"

கேள்வியாய்த் தொடுக்கிறான்.
"நல்ல அறிவுரைக்கு
நான்தரும் பரிசு இது"

ஐந்துரூபாய் நாணயத்தை
அவன்முன் வைத்துவிட்டு
அடுத்த இடம் நாடுகிறாள்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

போக்குக்காட்டி ஓட்டியும்
போக்குவரத்துக் காவலரிடம்
மாட்டிக் கொள்கிறான்.
இருக்கும் ஆவனம் காட்டி
இல்லாத ஆனவம் பேசுகிறான்.

ஒருநாளில் முடிவதை
ஒன்பதுநாள் அலையும்படி
வழக்குபதிவு செய்து
வழிவிட்டு நிற்கிறார் காவலர்
??????????????????????????????

தூண்டிலை வீசிவிட்டு
காத்திருக்கிறான் அவன்.,
வரப்போகும் நண்பருக்காகவும்
விழப்போகும் மீன்களுக்காகவும்.
கவனம் சிதறவைக்க
அலைபேசி அலறுகிறது
"சீக்கிரம் வாங்கப்பா !
சீரழிஞ்சு வந்திருக்கேன் !
அரைநாள் விடுப்புக்கு
ஆயிரம்பொய் சொல்லியிருக்கேன் !"

எதிர்முனையில் மெளனம் ?
அதன்பிறகே கவனிக்கிறான்
அது மேலாளரின் அழைப்பு !!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

துண்டிலில் சிக்கி
துள்ளியது மீனொன்று.
எடுத்துப் பார்த்தவன்
ஏளனமாய்ச் சிரிக்கிறான்
"வாயை மூடிக்கிட்டு இருந்தால்
வருமா இந்தநிலை உனக்கு"


அந்தமீனும் அவனைப்
பாவமாய் பார்க்கிறது !
ஏளனமாய்ச் சிரிக்கிறது !!