Tuesday, July 14, 2009

சென்னையில் தொலைத்(ந்)த......!



ஓடும் வாழ்க்கையில்
ஒருநாள் வசந்தமாய்

பாரம் இறக்கி
நேரம் ஒதுக்கி
சேரனில் துவங்கியது
சென்னைப் பயணம் - முக்கிய
நண்பன் திருமணம்

ஆளரவம் கேட்டு
கண்விழித்தேன் நடுஇரவில்!
தேவதை பார்த்து
திகைத்துப்போனேன் மறுநொடியில்!!

மின்னலாய்த் தோன்றினாள்
மனதினுள் ஊன்றினாள்
என்னெதிரே அமர்ந்தாள்
என்னுதிரம் கலந்தாள்

கண்களுள் நுழைந்தாள்
கருத்தினுள் இழைந்தாள்
தூக்கம் கலைத்தாள் - என்னுள்
ஏக்கம் விதைத்தாள்

என்கனவில் விடைத்தாள் - அவளே
என்கனவின் விடைத்தாள் - அட
நானானேன் வெறும்தாள்

அழகாய் இருக்கவில்லை - ஆனாலும்
ஆழப் பதிந்துவிட்டாள்!
நிமிர்ந்தே பார்க்கவில்லை - ஆனாலும்
நெஞ்சினுள் புதைந்துவிட்டாள்!!

கண்டவுடன் காதல்
கூடாது என்பவனைக்
கயவன் என்பேன்! - ஆம்
காதலில் விழுந்தேன்!!

இதயம் வெளியேவரத் துள்ள
இதழ்கள் வார்த்தையை மெள்ள
காதலை அவளிடம் சொல்ல - இதமாய்
கண் திறந்தேன் மெல்ல....

வேற்றுமுகம் கண்டேன் முன்னே,,
வெற்றிடம் உணர்ந்தேன் பின்னே,,,
வற்றியது உதிரம் உள்ளே - அவளை
உயிர் தேடியோடியது வெளியே

கண்ணியம் காக்கும் நோக்கத்தில்
கணநேரத் தாமதத்தின் தாக்கத்தில் - உடனே
காதலைச்சொல்ல மலைத்துவிட்டேன்
காதலியைத் தொலைத்து விட்டேன்

எப்படி எங்கே ஓடுவேன் ?
எங்கே எப்படித் தேடுவேன் ??
மிரட்டும் வாகனக் கடலில்..
மிதக்கும் வெகுசனத் திரளில்....

சுழலில் சிக்கிய துரும்பானேன்
ஆழியில் மாட்டிய எறும்பானேன்
ஆழ்கடல் மூழ்கும் இரும்பானேன்
ஆலையில் அரைபடும் கரும்பானேன்

திருமணம் இருப்பதையே மறந்து ..
தேவதையின் இருப்பையே உணர்ந்து..
திசையெல்லாம் தேடித் திரிந்து..
ஆசையெல்லாம் நொடியில் உலர்ந்து..

இரு உயிரை ஒரேநாளில்
பெருநகரில் தொலைத்து விட்டு
ஊர் வந்துசேர்ந்தேன் தோல்வியோடு
உயிர் இல்லா வெற்று உடம்போடு

நடைபிணத்தின் நிலைகாண
நண்பன் வந்தான் துணையோடு ,
இருமணம் இணைந்த - அவன்
திருமணத்தின் தொகுப்போடு .

புகைப்படத் தனித் தொகுப்பில்
புகையின் அணி வகுப்பில்
மணப்பெண் தோழியாய்
மனம் கவர்ந்த அவள் !

No comments: