Friday, August 28, 2009

மனமும் சேர்ந்தே விலைபோகும் இங்கே ...!


அது...
மனிதர்கள் பேரம் பேசும்..
மாடுகள் இடம் பெயரும்...
பெரும் பணம் கைமாறும்....
பெரிய மாட்டுச் சந்தை

இங்கே....
பொத்தி பொத்தி வளர்த்து
பெயர் வைத்து அழைத்து
குழந்தைபோல பாதுகாத்து
குடும்பத்துள் இணைத்து

வளமாய் வாழ்ந்து பின்
வஞ்சிக்கப்பட்ட மனிதரின்
வயிற்றுப் பிழைப்புக்காக
விலை பேசப்படும் மாடுகள்

முடிந்தபின்...
பணம் நிறைந்து இருக்கும் பைகளில்
மனம் நிறைந்து இருக்கும் வெறுமையில்
கட்டியிருந்த கயிறு மட்டும் கைகளில் - வீதியில்
கேட்டபடியே இருக்கும் மணியோசை காதுகளில்

"நல்ல வெலைக்குப் போச்சுது
நெறையப் பணமும் கெடைச்சது"

வெளியே சந்தோசமாய் சிரிக்கும்
வெளிச்ச முகமூடி மாட்டியபடி

'நல்ல இடத்துல சேருமா - இல்ல
அடி மாடாப் போயிருமோ'

கதறி உள்ளே அழும்
சிதறிய ஊமை உள்ளங்கள் .

ஓரமாய் ஆணியில் தொங்கும்
காற்றில் மெதுவாய் அசையும்
கழுத்து மணியின் ஓசை
ஆலய மணியின் அலறலாய்
அடிமனதுள் இறங்கும்.

தொடரும் வாரங்களிலும்
தொடர்ந்து வலம் வரும்
தொடர் அவலம் இங்கே !

அதே சந்தைதான்..
அதே வறுமைதான் !
வேறு மனிதர்களோடு..
வேறு மாடுகளோடு !!

1 comment:

உமா said...

அருமை வாழ்த்துக்கள்.