இனியொரு விதி செய்ய.. இனியாவது செய்ய...
Wednesday, July 1, 2009
உள்ளூரிலிருந்து உலகம்வரை ...!
தெரிந்துகொள்வோமா சனநாயகம் ?
================================
உள்ளூர் :
----------------
மரத்தடியில் ஒரேமேடையில் சாதியொழிக்கப் பேசுகிறான்
மய்யாவாடியில் சாதிக்கொருமேடையில் பிணம் எரிக்கிறான்
முதல்நாள் சாதிஒழிப்புப் போராட்டம் என்கிறான்
மறுநாள் உள்ஒதுக்கீடு ஆர்ப்பாட்டம் செய்கிறான்
சாமானியனுக்கு உதவிட மானியம் என்கிறான்
சாமானியனோ என்னவென்றே தெரியாமல் முழிக்கிறான்
தமிழ் நாடு :
--------------------
காலையில் சாகும்வரை உண்ணாவிரதம் என்கிறான்
மாலையில் சர்ப்பத்தை குடித்து முடித்துக்கொள்கிறான்
களையப்படும் இனம்காக்க புறப்படுவோம் என்கிறான்
கடையடைத்து வீட்டில் போய்ப் படுத்துக்கொள்கிறான்
மாலையில் அய்யாவிடம் அடிபணிந்து நிற்கிறான்
காலையில் அன்புச்சகோதரியின் ஆணையே போதுமென்கிறான்
ஒருமுறை போரென்றால் சாவுதான்வரும் என்கிறார்
மறுமுறை போராடினால்தான் தனிநாடுவரும் என்கிறார்
இந்தியா :
-----------------
அழிவைத் தடுக்க ஆனதைச்செய்வோம் என்கிறான்
அறிக்கை விடுவதோடு அமுங்கிப்போய் விடுகிறான்
இங்கிருந்து குடிக்கத் தண்ணீர் கொடு என்கிறான்
அங்கிருந்து கூட்டு குடிநீர் கூடாது என்கிறான்
தேவையா இந்தக் கூட்டணி மாற்றம் என்றால்
தேர்தலுக்குப்பின் மீண்டும் மாறிடலாம் என்கிறான்
மும்பை பணக்காரர்களுக்கு பாதுகாப்பு தருகிறான்
மன்னார் மீனவர்களை மயிராய்த்தான் மதிக்கிறான்
அண்ட நாடுகள் :
----------------------------
உயிரிழக்கிறார்கள் உண்ண உணவின்றி என்றால்
உயர் மருத்துவம் கொடுக்கிறோம் என்கிறான்
உயிர்பிழைக்க வருவோரை கொல்கிறாயே என்றால்
உள்ளே யாராவது போராளிஇருப்பான் என்கிறான்
பாதுகாப்பு வலையத்துக்குள்ளும் படுபாதகம் செய்கிறான்
பதுங்கு குழிகளுக்குள்ளும் பலவகைக்குண்டு வீசுகிறான்
மும்பை தாக்குதலுக்கு பதில் என்னாச்சு என்றால்
லாகூர் தாக்குதல் அதில் சரியாப்போச்சு என்கிறான்
போராடினால் சட்டம்தன் கடமையை செய்யுமென்கிறான்
ஆர்ப்பாட்டம் செய்தால்தானே அடங்கிப்போய் விடுகிறான்
திருட்டு வழக்கிலிருந்து விடுதலை ஆகிக்கொள்கிறான்
தலைமை ஏற்று வழிநடத்தும் நீதிமானாகிவிடுகிறான்
உலகம் :
----------------------
அணுகுண்டு சோதித்தாலே அழித்துவிடுவேன் என்கிறான்
ஆயிரம் அணுகுண்டு அவனிடமே வைத்திருக்கிறான்
தீவிரவாதியை ஒழிக்க தொடர்நடவடிக்கை என்கிறான்
தீவிரவாத நாட்டுக்கு தொடருதவி செய்துவருகிறான்
உலக நாடுகளுக்குள் உற்றுஉற்றுப் பார்க்கிறான்
உள்நாட்டுக்குள் உள்ளநிலை தெரியாமல் தவிக்கிறான்
அட
அவசரத்தில் சொல்லமறந்து போனேனே
இதற்குப் பெயர்தான் இங்கே சனநாயகமாம்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
உண்மை தான்
அருமை!!
தினம் ஒரு கவிதை எப்படி எழுதுகிறீர்கள் ஆச்சரியம்!!
Post a Comment