Tuesday, July 7, 2009

கடப்பாரை ஊசி ....!


ஆலமரத்தடி திண்ணைக்கு
ஆயாவோட மருத்துவரும்
அம்மைத் தடுப்பூசி போட
அமர்க்களமாய் வந்து இறங்கினார்

"திருக்கூசி டாக்டரு டோய் !
தெருவில நிக்கான் டோய் !!
தப்பிச்சு போயிருங்க டோய் !!!
தனியா மாட்டீராதீங்க டோய் !!!!"


சத்தம் கேட்ட மறுநொடியில
சந்து பொந்துல நொழஞ்சோமே !
வேட்டு கேட்ட கொக்கப்போல
எட்டு திக்குல பறந்தோமே !!

எப்படி எல்லாம் ஒடுனோமுன்னும்
எங்கே எங்கே ஒழிஞ்சோமுன்னும்
எதுக்குள்ள பதுங்குனோமுன்னும்
எங்களுக்கே கூடத் தெரியாதே !!

பரணு தட்டிக்கு மேலே......
பலக கட்டிலுக்குக் கீழே.....
குதிலு பானைக்கு உள்ளே.....
மதிலு படலுக்கு வெளியே.....ன்னும்

ஆலமரத்து மேலே ஒண்ணு....
அய்யனாருக்கு கீழே ஒண்ணு....
கொளத்துக் கரையில ஒண்ணு....
கெணத்து உறையில ஒண்ணு....ன்னும்

ஒண்ணொன்னா இழுத்துப் புடிச்சி
ஒட்டுமொத்தமா போட்டு முடிக்க
ஒருநாப் பொழுதும் அங்கே
ஒருவழியா முடிஞ்சே போச்சுதே !

பத்து வயசு வரைக்கும் ஊசிய
பக்கத்தில கூட பாக்காததால
பதட்டத்துல வந்த குளுரும்
பயத்தில வந்த காய்ச்சலும்

அஞ்சுநாளாகியும் பயபுள்ளைங்களுக்கு
கொஞ்சங்கூட அடங்கலியே அன்னிக்கு !
அந்தஊசிக்கு அப்பொறமா எனக்கு
எந்தஊசியும் போடலியே உண்மைக்கும் !!

ஊசியக் காமிச்சாதான இன்னிக்கு
கொழந்த கூட பொறக்குது !
ஊசியிலும் மருந்திலும் தான - இப்போ
ஒலகமே இங்க இயங்குது !!

3 comments:

தேவன் மாயம் said...

"திருக்கூசி டாக்டரு டோய் !
தெருவில நிக்கான் டோய் !!
தப்பிச்சு போயிருங்க டோய் !!!
தனியா மாட்டீராதீங்க டோய் !!!!"//

துரை ஐயா பாட்டு அமர்க்களம்!!

Chithan Prasad said...

வணக்கம் துரை ஐயா
இந்த கவிதையை நான் யுகமாயினி அச்சு இதழில் பயன் படுத்திக் கொள்ள அனுமதி தருவீர்களா?
சித்தன் yugamayini.blogspot.com

Chithan Prasad said...

வணக்கம்
தங்களுடைய இணையப் புகைப்படம் pixel அடிக்கின்றது. பயன்படுத்த இயலாது. அதனால் உடனே ஒரு புகைப்படத்தை எனது chithankalai@yahoo.co.in மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித்தரவும்.
சித்தன்