Thursday, July 9, 2009

இல்லத்தரசியாம்..?????


திடுக்கிட்டுப் பதறி எழுகிறாள்
தடுமாறி நேரம் பார்க்கிறாள்

சுவரில் கடிகாரம்
ஆறு மணி - மாலை
ஆறுமணியைத் தாண்டி விட்டது


அறக்க பறக்க எழுந்து
அடுக்களை நாடுகிறாள்
திரிந்த பால்கொதித்து
தரையெல்லாம் சிதறியபடி

அப்போதுதான் அவள்
அறைக்குள் கவனிக்கிறாள்
கண்ணயர்ந்த பொழுதில்
தாண்டிப் போயிருக்கிறான்

இறுகிய முகத்தோடு
இருக்கிறான் அவன்
பதுக்கிய கோபத்தோடு
படுக்கையில் அவன்

குழந்தையை படிக்கவைத்து
கிழவியை படுக்கவைத்து
கூடத்தைக் கூட்டிமுடித்து
கதவடைத்து வரும்பொழுது

தூங்கிப்போயிருக்கிறான் கணவன் - அவளின்
ஏங்கிப்போயிருக்கும் கனவுகளுடன்


அதிகாலை விழித்து
அரைகுறையாய்க் குளித்து
வாசல்கூட்டித் தெளித்து
வந்தகோலம் அமைத்து

சமையல் முடித்து
சட்டியில் அடைத்து
பள்ளிக்குப் பிள்ளையை
பதட்டத்தோடு அனுப்பி

உடுப்பு மடித்து
செருப்புத் துடைத்து
தண்ணீர்குடித்துக் களைப்போடு
தலை நிமிர்ந்தால்

எதிரே.......
எதிரியாய்.......
எகிரிப் பாயத்தயாராய் அவன்
எதிர் பார்க்கவில்லை அவள்

தள்ளி விடப்படும் காலித்தட்டும்
முகத்தில் அடைக்கப்படும் வாசல்கதவும்
முற்றத்தில் கலைக்கப்படும் புள்ளிக்கோலமும்
மிதிவாங்கி அலரும் இருசக்கர வாகனமும்

நெற்றிப்பொட்டில் அறைந்து -அவளுக்கு
நிம்மதியைக் கலைத்து உணர்த்துகிறது
நேற்றைய கோபம் உறைந்ததையும் - இன்றும்
முற்றிப்போய்த் தொடர்வதையும்

மதிய உணவு எடுத்து
மயக்கும் வெயிலில் நடந்து
பள்ளியில் கொணடு சேர்த்து
மரத்தின் அடியில் ஓய்ந்து

மல்லி பறித்து
மாலை தொடுத்து
விளக்கேற்றி வைத்து
வீட்டுவேலை முடித்து

அளவுப்பால் வாங்கி
அடுப்பினில் வைத்து
மிஞ்சும் சோர்வோடு
ஊஞ்சலில் அமரும்போது

தன்னையும் அறியாமல்
கண்ணயர ஆரம்பிக்கிறது

சத்தமில்லாமல் நுழைந்து
பக்கம்தாண்டிச் செல்கிறான் அவன்
மெல்ல அக்கம் பார்த்து
மெதுவாய்ப் பத்தவைக்கிறாள் கிழவி

"விளக்குவைக்கவும் துங்குவா அய்யா !
இப்படியிருந்தா வெளங்குமா அய்யா ?
வேலை எதுவும் செய்யாம பொய்யா.,
வெட்டியாவே இருக்கா அய்யா !!"


மாமியார் 'அவரின்'
மகனிடம் சொல்லிய
தகவலதைக் கேட்கிறாள்
திடுக்கிட்டு எழுகிறாள்

திகைத்துப்போய் அழுகிறாள்
தனக்குத் தானே அமைகிறாள் - பின்
அடுக்களைக்குள் நுழைகிறாள்
அடுத்தவேலைக்குத் தயாராகிறாள்


சுவரில் கடிகாரம்
இன்றும் ஒடிக்கொண்டிருக்கிறது
தொடர்ந்து ஒடிக்கொண்டே..............
........................................
............................................

4 comments:

ரவி said...

சுவரில் கடிகாரம்
இன்றும் ஒடிக்கொண்டிருக்கிறது
தொடர்ந்து ஒடிக்கொண்டே...


நல்ல டச்.......

ரவி said...

ஆவீங்க நீங்க ரீச்...

duraian said...

நன்றி நண்பரே

"உழவன்" "Uzhavan" said...

இவ்வளவு பெரிய பொறுப்புகளைச் சுமந்தும், வீட்டில் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை அழகாக சொல்லியுள்ளீர்கள். கவிதை நீளத்தை சற்றுக் குறைத்திருக்கலாம்.