Tuesday, July 28, 2009

வெட்டியானுக்கொரு வேண்டுகோள்...


நண்பனே !
விவசாயி மகனாய்ப் பிறந்து
வாழ்க்கக்ப் பூராம் ஏமாந்து
(வி)சாரிக்க ஆளில்லாம
சருகாகி உதுந்தவனே
வானத்துல கரைஞ்சவனே
வனத்துல தொலைஞ்சவனே
ஏ என்னோட நண்பனே !!

நாலுதெருவு தாண்டிப் போனாலும்
ஏழுதடவ சொல்லிட்டுப் போவியே
ஏழுலகம் தாண்டி போறப்போ
ஏங்கி நிக்கிறனே நானுமிங்கே
எங்கிட்ட சொல்லாமலே
ஏமாத்திப் போயிட்டியே
ஏ நட்ப்பை மறந்த நண்பனே !!!


மக்களே !
அறுபது ஆண்டுகாலமா மாடா
அடுத்தவனுக்கே உழைச்சவனோட
இறுதி ஊர்வலம் இங்கே
ஆறுபேரோட முடிஞ்சிடுச்சே
ஏ நன்றிகெட்ட மக்களே!!

ஊர்ப்பெரிசே !
உயிர்பாய்ச்சி பயிர்வளர்த்து
கதிர் புடிக்கக் காவலிருந்து
முதிர்ந்ததெல்லாம் சேர்த்துக்கட்டி
உதிர்ந்ததயும் சேத்துலக் கூட்டி

வயிறு வளக்க உம்முன்னால
கையக்கட்டிக் பாத்துநின்னானே
வாயப்பொத்தி உம்முன்னால
வாழ்க்கப்பூராக் காத்துநின்னானே
கரையேத்தி விடாம
கையக்கழுவி விட்டிட்டியே
ஏ சுயநல ஊர்ப்பெரிசே !!


வரட்டி பொறுக்க,வரப்பு பெருக்க
களை எடுக்க,கரை புடிக்க
குடும்பம் சுமக்க,குழந்தை வளர்க்கன்னு
அஞ்சு வயசுல குனிஞ்சவன்

அரைவயித்துக் கஞ்சிக்காக
ஆண்டே முன்னாடிக் குனிஞ்சவன்

பெண்டுகளக் கரைசேக்க
வந்தவங்க முன்னாடிக் குனிஞ்சவன்

குடும்பநலம் வேண்டி
கடவுள்முன்னாடிக் குனிஞ்சவன்

கடைசிவரைக்கும் நிமிரவேயில்லையே
கண்ணும் பகல்வானம் பாக்கவே இல்லையே

ஏ நல்ல வெட்டியானே !
எரியூட்டும்போது அவன்
நரம்பு முறுக்கேறி
விரைத்து எழுவான்
நிமிர்ந்து அமர்வான்
வீழ்த்திவிடாதே அவனை

எல்லாம் முடிந்தபின்
கடைசிக்கும் முன்னால்
வாழ்க்கைக்குப் பின்னால்
முதன்முதலாய் நிமிர்வான்

வீழ்த்திவிடாதே அவனை
அவனாகவே வீழும்வரை
வாழ்த்திவிடு அவனை
வானகம் வாழ்த்தும் உன்னை


ஏ நாலும் தெரிந்த வெட்டியானே !!
நானும் வருவேன் நல்ல வெட்டியானே !!!

1 comment:

இளைய கவி said...

ரொம்ப நல்லா இருக்கு தல.. ஆழமான வரிகள் கிராமிய நடையில்..