வீதியெங்கும் பரபரப்பு
விடிந்தால் தீபாவளி...
விதியை நொந்தபடி நான்....
பதறிப் போயிருக்கிறேன்
கையிருப்பும் காலியாகி இருந்தது...
”யாத்தே......
என்ன செய்வேன்..?
எப்படி சமாளிப்பேன்..??
இதுதான் கடைசியும் கூட...........”
வெறுமையால் நிறைந்திருக்கும்
அந்தக் குடிசையின் தரையில்
படுத்திருக்கிறார்கள் அவர்கள்
ஏதோ புரிந்ததால் கண்ணைமூடி
தூங்கியதுபோல நடிக்கிறது ’மூத்தது’...
எதுவும் புரியாததால்
கேள்விகளால் துளைத்தபடி
புரண்டுக்கொண்டே இருக்கிறது ’சின்னது’...
”அம்மா...இது வடை தானே ??”
பதட்டத்தை மறைத்தபடி
காதிலெதுவும் கேட்க்காததுபோல
இடையில் நிறுத்தாமல்
தொடர்ந்தபடி இருக்கிறேன் நான்...
”அப்போ அந்த ராசா முன்னால
தொம்முன்னு குதிச்சதாம் ஒரு..........”
சூழ்ந்திருக்கும் வீடுகளிலிருந்து
சூழ்ச்சி மணத்துடன் எழுந்து
கள்ளத்தனமாய்த் தவழ்ந்து
கூரையைப் பிளந்து நுழைந்து
குழந்தைகளின்முன் உருண்டு
குட்டிக்கரணம் அடித்தபடியே
என்னைக் கேலிசெய்து கொண்டிருக்கிறது...
விதவிதமாய் தாளிக்கும் சப்தமும்
வகைவகையான பண்டங்களின் வாசமும்....
திடீரெனத் துள்ளி எழுந்த ‘சின்னது’
பிரகாசிக்கும் கண்களுடன்
மூச்சை இழுத்து விட்டு
”ம்ம்ம்ம்......இது முறுக்கு...!” என்றதும்
ஈரக்குலை அறுந்தது எனக்கு
கையைப் பிடித்து இழுத்து
முகத்தை அடிமடிக்குள் புதைத்து
உரத்த குரலில் ஆரம்பிக்கிறேன்
தெரியவில்லை என்றாலும்
புதிய கதையொன்றை ..............
”ஒரே ஒரு ஊருல ..................”
.
( நன்றி : கரு : ப்ராங்க்ளின் குமார்)
4 comments:
உருக்கமான கவிதை.
Nandru...
என்ன சொல்ல
கவித கவித... கலக்கல்.
Post a Comment