இனியொரு விதி செய்ய.. இனியாவது செய்ய...
Wednesday, October 15, 2008
மாடி வீட்டு ஏழைகள்
சுழற்றியடித்த
சூறாவளி மழை
சிறுசிறு இழையாய் இன்னும்
தூறிக்கொண்டே இருக்கிறது
தாத்தாவின் காவலிலிருந்து
தப்பிவந்து தண்ணீருக்குள்
குட்டிக் கரணம் அடிக்கும்
குட்டித் தம்பிகள்
சேறும் சகதியும் காலுக்கு
செறுப்பாய் மாற கூட்டு சேர்ந்து
கும்மாளம் போடும்
குட்டிப் பாப்பாக்கள்
குதித்து வரும் தண்ணீருக்கு
குறுக்கே மணலில் அணைகட்டி
பக்கத்து வீட்டுப் பாட்டிகளோடு
பகை இழுக்கும் அக்காமார்கள்
கணக்கு நோட்டுகளை எல்லாம்
கப்பலாய் மாற்றி தெருவில் ஓடவிட்டு
அப்பாவின் அடிக்கு மாட்டாமல்
தப்பி ஒடும் அண்ணன்மார்கள்
பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்
பால்கனியிலிருந்து ஏக்கத்தோடு
ஆரோக்கியம் சுகாதாரம் என்ற
ஆகாத பெயர் சொல்லி
அனைத்தையும் இழந்த
அந்த மாடிவீட்டுக் குழந்தைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment