Sunday, June 21, 2009

எனக்குள் 32 (அ) 32 க்குள் நான்


எனது அன்பின் அக்கா
திருமதி .பூங்குழலி /மருத்துவர்
அன்பான குடும்பத்தில் 9 மாதம் மூத்தவர்
அடுத்தவரை முன்னிருத்துவதில் முதன்மையாய் இருப்பவர்
என்னை இந்தப் பதிவுக்காக முன்மொழிந்தவர்
- அவருக்கு எனது நன்றி கலந்த வணக்கங்களுடன் ஆரம்பிக்கிறேன் !

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு இந்தப் பெயர் பிடிக்குமா?
#)எனது பெற்றோருக்கு மிகநீண்ட காத்திருத்தலுக்குப்பின் (6 ஆண்டுகள்), தொடர்ந்து 3முறை குலதெய்வத்தின் பெயர் வைப்பதாக வேண்டிக்கொண்டபின் பிறந்ததால் எனக்கு குலதெய்வம் பெயர் சேர்த்து உச்சிமகாளி துரை என்று பெயர்சூட்டப்பட்டது. அடுத்து தம்பிக்கும் அதே பெயர்.அப்பொழுது "வசந்த மாளிகை" தாக்கம் இருந்த நேரம்.கூப்பிடும் வசதிக்காக நான் 'பெரிய துரை' ஆனேன்,தம்பி 'சின்ன துரை'ஆனான்.

#)'துரை 'பிடிக்ககாம இருக்குமா !


2. கடைசியாக அழுதது எப்பொழுது?
#)எனக்குத் தெரிந்து ஒரேஒருமுறை - எனது தந்தையின் மரணத்தில்.
எனது குழந்தை பருவத்தில்,ஏழ்மை நிலையில் எங்களுக்காகவே உழைத்து,உழைப்பையே சுவாசித்து,உழைப்பை மட்டுமே அனுபவித்தவர்.அவர்பிறந்த கிராமத்து மண் மீது அதிக பிடிமானம் உள்ளவர்.அவருக்காக கிராமத்தில் பண்ணைவீடு, சுற்றிலும் தோட்டம் எனற எனது கனவு திட்டத்தில் மிக உறுதியாக இருந்தேன்.நான் சம்பாதிக்க ஆரம்பித்து,வீட்டு கட்டிட வேலை ஆரம்பிக்கும் தருணத்தில் திடீரென மறைந்துபோனார், எதையுமே அனுபவிக்காத எனது அப்பா ...


3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?
#)ஆமாம்.எனக்கு மிகவும் பிடிக்கும்.எனது ஆங்கில எழுத்து அந்தக்கால மைக்குடுவை/மயிலிறகால் எழுதுவார்களே ! கிட்டத்தட்ட அதுபோல இருக்கும் (இதற்காகவே பேனா வாங்கியவுடன் நிப்பை சிறிது சாய்த்துவைத்து, தரையில் மெதுவாக தேய்த்து,பட்டையாக எழுதுவதற்கு தயார் செய்வேன்.எப்படியும் ஒரு நாள் ஆகிவிடும் ).
இதில் ஒரு தவிர்க்கமுடியாத சிக்கலும் உண்டு.இன்றுவரை (எனது,அக்கா,தங்கை)குழந்தைகளுக்கும் புத்தகமுகப்பு எழுதுவதில் ஆரம்பித்து,அட்டைபோடும்வேலைவரை மெதுவாக என்தலையில் ஏற்றிவிட்டுவிட்டார்கள்
#)எனது கையெழுத்து (signatute) பார்ப்பதற்கு கொக்கு ஒற்றைக்காலில் தவம் நிற்பது போலிருக்கும் :)

4. பிடித்த மதிய உணவு என்ன?
#)இதுதான் எனக்கு சரியாகக் கிடைப்பதில்லை.பயணத்திலேயே அதிக நேரம் இருப்பதால் பெரும்பாலும் வெளியே கடைகளில் சாப்பிடுவதை தவிர்த்துவிடுவேன்.எவ்வளவு நேரம் ஆனாலும் வீடுபோய் சேர்ந்தபிறகுதான்/என்னவாக இருந்தாலும்.

5. நீங்கள் பார்த்தவுடன் யாருடனாவது உடனே நட்புக் கொண்டாடக் கூடியவரா?
#)எனக்கும் ஆசைதான்.ஆனால் முதல்சந்திப்பு பெரும்பாலும் அறிமுகத்துடனேயே முடிந்து விடுகிறது.(பயம்/மரியாதை).ஆனால் தொடர்ந்தது எல்லாமே இதுவரை தொடர்ந்துகொண்டேதான் .....

6. கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
#)கடல் குளியல் பிடிக்கும்.கடல்சார்ந்த ஊரில் இருப்பதால் இது எளிதாகவும் கிடைக்கும்
அருவியில் குளிக்க மிகவும் ஆசை.நாளிதழில் ஆர்ப்பரிக்கும் அருவியின் (குற்றாலம்) படம் பார்த்து,உடனடியாக அவசரத்திட்டம் போட்டு ,ஆர்ப்பாட்டமாய் அங்கேபோய் நின்றால் எல்லோரும் எண்ணையில் குளித்துவிட்டு சொம்பு வைத்து தண்ணீர்பிடிக்க வரிசையில் காத்திருப்பார்கள் :(.ஆறுதலுக்காக தாமிரபரணியில் (திருநெல்வேலி)குளித்துவிட்டு வருவோம் !

7. முதலில் ஒருவரைப் பார்க்கும்போது எதனைக் கவனிப்பீர்கள்?
#)அவர் என்னிடம் என்ன கவனிக்கிறார் என்பதை

8. உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விடயம் என்ன? பிடிக்காத விடயம் என்ன?
#)பிடித்தது - எது நடந்தாலும் நல்லதே என ஏற்றுக்கொள்வேன்
(சில சமயங்களில் மனது சங்கடத்துடன்)
#)பிடிக்காதது - நான் விழிக்கும் முன் சூரியன் உதிப்பது :(

9. உங்கள் பாதியிடம் உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத விடயங்கள் என்ன?
#)பிடித்தது - எனக்கு பாதி இடம் கொடுத்தது (50%)
#)பிடிக்காதது - பாதி கொடுத்துவிட்டு முழுவதுமாய் ஆக்கிரமித்தது (100%)

10. யார் பக்கத்தில் இல்லாமல் இருப்பதற்காக வருந்துகிறீர்கள்?
#)அப்பா

11. இதை எழுதும்போது என்ன வண்ண ஆடை அணிந்திருக்கிறீர்கள்?
வெள்ளை பனியன்/நீலநிற கட்டம்போட்ட கைலி (வீட்டில் இருக்கிறேன் !)

12. என்ன பாட்டு கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
இல்லை.ஹாலில் ஏதோ படம் ஓடிக்கொண்டிருக்கிறது :(

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக மாற உங்களுக்கு ஆசை?
#)பச்சை

14. பிடித்த மணம்?
#)சமையல் அறையிலிருந்து வெளியே 'வரும்' என்னவளின் வாசம்

15. நீங்கள் அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களைப் பிடித்து உள்ளது? அவர்களை அழைக்கக் காரணம் என்ன?
#)சீனா
#)கிம
#)நாகரா
#)தமிழன்
#)நடராஜன்
#)ராஜா
ஒவ்வொருவரும் தனித் தன்மை வாய்ந்தவர்கள்

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
#)அவரின் எல்லா பதிவும் பிடித்தவைதான்.அனைத்துமே சம்பந்தப்பட்டவரை முன்னழைத்துச் செல்லுவதாகவே இருக்கும்

17. பிடித்த விளையாட்டு?
#)குழந்தைகளை ஏமாற்றி விளையாடுவது

18. கண்ணாடி அணிபவரா?
#)இல்லை

19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
#)இயற்கை சார்ந்த (காட் மஸ்ட் பி க்ரேஸி,அபோகலிப்டா)
அறிவியல் சார்ந்த (ரிட்டன் ஆப் த ஜெடாய்,ஈ.டி,ஏலியன்/ப்ரிடேட்டர்)
உளவியல் சார்ந்த (அன்பே சிவம்,அஞ்சலி)
படங்கள் அத்தனையும்

20. கடைசியாகப் பார்த்த படம்?
#)பசங்க- அந்த 'குஞ்சுமணி' என்னை மிகவும் கவர்ந்தது :)

21. பிடித்த பருவகாலம் எது?
#)இப்போ இருக்கும் ( 8x8ல் 5ம் பாகம் ie 32 - 40 ) காலம்தான் !
#)மழை(க்காலமும்) ரொம்பப் பிடிக்கும் !!


22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
#)கணிதம் (பசங்க சந்தேகம் தீர்ப்பதற்காக . தெரியவில்லை என்று சொன்னால் கிண்டல் செய்கிறார்கள்!!!!!)

23. உங்கள் டெக்ஸ்-டொப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு தடவை மாற்றுவீர்கள்?
#)கணக்கு வைத்துக்கொள்வதில்லை

24. உங்களுக்குப் பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
#)பிடித்தது :மிஸ்டு கால் - வீட்டிலிருந்து வருவது :)
#)பிடிக்காதது :மிஸ்டு கால் - மற்றவரிடம் இருந்து வருவது :(

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்சத் தொலைவு?
#)மன ரீதியாக இதுவரை இல்லை
உடல் ரீதியாக டெல்லி,மும்பை

26. உங்களுக்கு ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
#)உங்களை இதை படிக்கவைத்திருக்கிறேன் :)

27. உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்?
#)பொய்,பொய் மட்டுமே

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் ஒரு சாத்தான்?
#)காலைநேரத் தூக்கம்/சோம்பல்

29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
#)என் வீடு தான்

30. எப்படி இருக்கவேண்டுமென்று ஆசை?
#)இப்படியே

31. மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
#)ஆகா !
கடைசியில் ஒரு நாரதர் கேள்வி !!
இட ஒதுக்கீட்டில் என்நிலை (100%) மிக மோசமான நிலையில் இருப்பதால் அப்படி ஏதாவது செய்தாலும் தெரிந்துவிடும் :(

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்கள்.
#)கிடைத்ததோடு மனமொன்றி வாழுங்கள் - இதுவரை
கிடைக்காததெல்லாம் கேட்காமலேயே கிடைக்கும்.

என்றும் அன்புடன்
-துரை.ந.உ

11 comments:

தமிழ் said...

/31. மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
#)ஆகா !
கடைசியில் ஒரு நாரதர் கேள்வி !!
இட ஒதுக்கீடு (100%) மிக மோசமான நிலையில் இருப்பதால் அப்படி ஏதாவது செய்தாலும் தெரிந்துவிடும் :(
/

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ஒளியவன் said...

அருமையான பதில்கள் அன்பரே. நீங்கள் வயதில் மூத்தவரென இப்பொழுதுதான் கண்டுகொண்டேன்.

இளைய கவி said...

ரொம்ப நல்லா இருக்கு ! முடிந்தால் மதுரை பதிவர் சந்திப்புக்கு வரவும் ..

Anonymous said...

அனைத்துமே அருமை அண்ணே ! அதுவும் அந்த 8 வது கேள்விக்கான பதில் டக்கரு !!

Unknown said...

அன்புள்ள நண்பர் துரை,

32ஆம் கேள்விக்கான பதில் மிகவும் அர்த்தம் பொதிந்துள்ளது. எல்லோருக்கும் இந்த மனநிலை வந்துவிட்டால் நாம் வாழும் இடமே சொர்க்கம்தான்.!!

அன்புடன்,

குமார்(சிங்கை)

ரிதன்யா said...

9. உங்கள் பாதியிடம் உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத விடயங்கள் என்ன?
#)பிடித்தது - எனக்கு பாதி இடம் கொடுத்தது (50%)
#)பிடிக்காதது - பாதி கொடுத்துவிட்டு முழுவதுமாய் ஆக்கிரமித்தது (100%)

நல்ல பதிலுங்க
அடிமைன்னு சொல்லுங்க

Thangamani said...

அன்புள்ள துரை!
உன் கவிதைகள் எல்லாம் புதுமை!அருமை!படித்து மகிழ்கிறேன்!
இந்த கேள்வி-பதில் நிகழ்ச்சியிலும் உன் பதில்கள்
சிறப்பாக,சிறிது நகைச்சுவையாக,புத்திசாலித் தனமாக,
அப்பாவைப் பற்றி உணர்ந்து உணர்ச்சிப் பூர்வமாகக்......கூறியது
மனதில் நிற்கிறது!
துரை!பாராட்டுகள்!வாழ்த்துகள்!

அன்புடன்,
தங்கமணி.

சா.கி.நடராஜன். said...

அன்பு நண்பரே முப்பதிரண்டுக் கேள்விகள்
முத்து முத்தான பதில்கள்
அத்தனையும் தேன் தேன்
அதை நான் பார்த்தேன்
பார்த்ததும் படித்தேன்
படித்ததும் ரசித்தேன்
மகிழ்ந்தேன் நெகிழ்ந்தேன்
என்பெயரங்கேக் கண்டேன்
உன்னிலும் நானாவென வியந்தேன்
என்செய்தேன் நானென விழித்தேன்
தந்தை மீது பாசத் தேன்
பொழிவதை மதித்தேன்
இனி வாழ்வெல்லாம் உமக்குத் தேன்
தேன் தேன் என உரைத்தேன்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்

cheena (சீனா) said...

அன்பின் அழகுதுரை

நான் ஏற்கனவே எழுதி விட்டேனே ! - சரி என்ன செய்ய்லாம் - பார்ப்போம்

பதில்கள் அனைத்துமே அருமை

அப்பா - என்றுமே உற்ற துணையாய உடனிருக்க - நல்வாழ்த்துகள்

மிகவும் ரசித்தேன் துரை

Unknown said...

அன்பின் துரை,

”பிடித்த மணம்” என்ற கேள்விக்கு சமையல் அறையிலிருந்து வரும் என்னவளின் சமையல் வாசம் என்று சொல்லாமல் என்னவளின் வாசம் என்று சொன்னது கவிநயமானது.

பல கேள்விகளுக்கு பொய் கலக்காத நேரடி பதில்கள் உங்கள் எளிமை விரும்பும் இதயத்தை எடுத்துக் காட்டுகிறது.

கடைசி கேள்விக்கான பதில் வாழ்வின் அசைக்க முடியாத தத்துவம்.

அன்புடன் புகாரி

Shan Nalliah / GANDHIYIST said...

Greetings from norway!