Sunday, November 23, 2008

வயசுக் கோளாறு !!


அந்தி சாயும் வேளையில்
அந்தப் பெட்டிக்கடையின் மறைவில்
ஆனந்த அதிர்ச்சிக்காக
என்னவளின் பார்வைக்காக
எந்தன் தேவதையின் வருகைக்காக
நாளெல்லாம் பார்த்ததுநிற்பேன்

காற்றில் படபடத்து
கண்களுக்கு வலை வீசும்
பளபளப்புக் கூந்தல் பார்த்தவுடன் என்
பாதம் வானத்திலே மிதக்குமே

பட்டுச் சேலை பரபரக்க
பட்டுப்பூச்சியாய் மிதந்துவரும்
பாவையின் அழகு பார்க்க
பத்துநாளானாலும் பாதையிலேயே
பட்டினியாய்க் காத்து இருப்பேனே

ஓரவிழிப் பார்வையின்
ஒரு கண் அசைவிற்காக
ஒன்றல்ல,இரண்டல்ல
ஒன்பது நாளானாலும்
ஓரமாகவே காத்துக் கிடப்பேனே

ஆயிரம் பேருக்கு நடுவில்
அவள் இருந்தாலும் அந்த அறிவுள்ள
சுண்டுவிரல் அசைவினில் எனக்கு
சுத்தமாய் ஆயிரம் அர்த்தங்கள் புரிந்ததே

மணந்தால் மகாதேவி என்று வீராப்பு பேசி
மறுத்துப்பேசியோரை எல்லாம் ஏசி
சொந்தங்களின் சொல்லை மீறி
சொந்தமாக்கிக் கொண்டேனே அவளை ! !

இன்று.........

கதிரவனின் ஒளி பரவும் நேரத்தில்
கைதியைப்போல கட்டிலின் ஒரத்தில்
அதிர்ச்சி மேல் அதிர்ச்சியோடு
என்னவள் பார்வைக்காக
எட்டு மணியிலிருந்து காத்திருக்கிறேன்

பலவண்ணம் ஏற்ற ஏதுவாய்
பதப்படுத்தப்பட்ட பரட்டைக் கூந்தலுடன்
படுக்கையிலிருந்து எழுந்து என்னிடம்
பகல் காப்பிக் கேட்பவளைப் பார்த்து
கலங்கிப் போய் இருக்கிறேன்

பகல் பொழுது முழுவதும்
இரவு ஆடையிலிருந்து வெளியேராமல்
அங்கி போட்ட சாமி போல
தூங்கித் தூங்கி விழும்போதெல்லாம்
அந்தநாள் நினைவில்
ஏங்கியபடி இருக்கிறேன்

ஓரமாகவே இருந்து பார்த்தவனுக்கு
நேராகப் பார்த்தவுடன்தானே தெரிந்தது
அவளது பார்வையே ஒருமாதிரியாய்
ஓரமாகத்தான் இருக்குமென்று
பரிதவித்துப் போய் இருக்கிறேன்

ஒன்றல்ல இரண்டல்ல
ஒன்பது முறை விளக்கினாலும்
ஒன்று கூட புரிவதில்லை
பட்டயப் படிப்பு முடிக்கவே இன்னும்
பத்துப் பாடம் பாக்கியாம்
தெரிந்ததிலிருந்து இதயம்
தடுமாறிப்போய் இருக்கிறேன்

"மணந்தால் மகாதேவி என்று வீராப்பு பேசி
மறுத்துப் பேசியோரை எல்லாம் ஏசி
சொந்த்ங்களின் சொல்லை மீறி
நானாகவேத் தான் போய் மாட்டிக்கிட்டேனா??????"

No comments: