Wednesday, November 19, 2008

கண் கெட்டபின்...?


பாலர் பருவம்
பள்ளிப் பாடங்கள் எல்லாம்
பலாச்சுளை போல இனித்தது
ஆசிரியர் எல்லோரும்
ஆண்டவன் போலத் தெரிந்தனர்

அப்போது தோன்றியது
"அதிகம் படிக்க வேண்டும்"

கல்லூரி வாழ்க்கை
கண்முன்னே புதிய களம்
கண்காணிப்பு இல்லாத கானகம்
கட்டுப்பாடு இல்லாத பரந்த உலகம்
பேராசிரியர் எல்லோரும்
பேராபத்தானவராய்த் தெரிந்தனர்

வெளியாகிறதா புதிய திரைப்படம்
வேண்டுமே முதல் வரிசையில் இடம்
எடுத்துவைப்போம் கோரிக்கைகளை
எடுத்துக்கொள்வோம் விடுமுறையை

ஆகா அனுபவித்தோம் வாழ்க்கையை
அந்த இடத்தில் படிப்பா?
அது பற்றி தோன்றவே இல்லை!

அடுத்தக் கட்டம்
அங்கே பள்ளி இல்லை,கல்லூரி இல்லை
ஆனாலும் அனுபவப் பாடம்
அதுவாகவே கொஞ்சமாய்ப் புரிந்தது

புத்தியில் எதுவோ
புரிந்ததுபோலத் தெரிந்தது
"எதற்கும் கொஞ்சம் படித்திருக்கலாமோ?"

தற்போது கலவரமாய் நிலவரம்
தலை தப்பியே ஆக வேண்டும்
ஒரு வேலை இருந்தால் தான்
ஒருவேளை உணவுக்கு உத்திரவாதம்

கண் திறந்தார் கடவுள்
கிடைத்தது கதவு திறந்துவிடும் வேலை

முதல் நாள் வேலை
முதல் கதவு திறக்கிறேன்
முதலாளியாய் வந்தவர்
கல்லூரியில் எனக்கு
மூன்றாண்டுகளுக்குப் பிறகு சேர்ந்து
முறையாய் படித்து முடித்த
மூன்றாவது தெரு முத்து சாமி

கண்கள் குளமாகிறது
"கண்டிப்பாய் படித்திருக்கவேண்டும்"

No comments: