Monday, November 17, 2008

மற்றவர்களும்,என் இதயமும்


"இதயத் துடிப்பு அடங்குகிறது
இயன்றவரை செய்துவிட்டோம்
இன்று இரவு தாங்காது
இறைவனிடம் வேண்டுங்கள்"

அவசரச் சிகிச்சை பிரிவில்
தீவிர சோதனைகளுக்குப்பின்
சூழ்ந்து நிற்கும் சொந்தங்களிடம்
சொல்லிக்கொண்டிருக்கிறார் மருத்துவர்

என் இதயத் துடிப்பா?
நிற்கப்போகிறதா?
அது எப்படி நிற்கும்?

அயல் நாட்டு சாதனங்களாலும்
அனுபவப் பாடங்களாலும் கூட
சரியாகக் கணிக்க முடியவில்லையே
அவர்களை பார்த்தால்
எனகுப் பாவமாக இருக்கிறது

இதயமற்ற இறைவனிடம் என்
இதயம் காக்க வேண்டிக்கொண்டு
இரவு முழுவது கண் விழித்து
இதமாய் கவனிப்பார்கள் பெற்றோர்கள்

நலம் விசாரித்துவிட்டுச் செல்லும்
நண்பர்கள் கவலையோடு
நடுநிசிவரைக் பார்த்திருப்பார்கள்
நிகழ்வுகளை அசை போட்டிருப்பார்கள்

என்னுள் இருக்கும் இதயம்
எனக்காக மட்டுமே துடிப்பதாக
தவறுதலாய்க் கணித்துவிட்டு
தவிப்போடு காத்திருக்கிறார்கள்

அவர்களை நினைத்தால்
எனக்குப் பாவமாக இருக்கிறது

அவர்களுக்குத் தெரியாது

அது அதனுள் இருக்கும்
என் அவளின் இதயத்துக்காகத்
துடித்துக்கொண்டிருக்கிறது

பிறகு எப்படி நிற்கும்?

1 comment:

Mylsamy said...

Its really good poem. Please don't mind...you can choose some other photos..its looks harsh