Tuesday, November 18, 2008

திட்டம் பல தீட்டி....


குடும்பங்கள் சில கூட்டாய் சேர்ந்து
நெடுநாள் திட்டம் பல தீட்டி
இல்லாத தாத்தாவுக்கு
இதய நோய் என்று

அலுவலகத்தில் காரணம் சொல்லி
அவசர விடுப்பு எழுதிக் கொடுத்து
குதூகலமாய்க் கூடிக் கிளம்பினோம்
குடும்ப,இன்பச் சுற்றுலா

ஆரவாரமாய்க் குதித்து
அடித்துப்பிடித்து இடம் போட்டு
ஆசுவாசமாய் மூச்சு விட்டு
அமர்க்களமாய்க் கால் நீட்டி
அரைத்தூக்கம் தூங்கி எழுந்தபின்

கையில் பட்டது
பையில் உள்ள சாவி.

உள் மனதில் ஒரு சாத்தான்
உரக்கக் கத்தத் தொடங்கியது

"எதையோ மறந்துவிட்டாய்"

மறக்க வாய்ப்பே இல்லையே!
மறுமுறை சரிபார்த்து விடலாமா?

நகைப்பெட்டியைப் பூட்டி சாவியை
அஞ்சறைப்பெட்டிக்குள் வைத்தாகிவிட்டதே!

எரிவாயு உருளையை துண்டித்து
எரிந்த விளக்குகளை அணைத்தாகிவிட்டதே!

தண்ணீர்க் குழாயை மூடி
திறந்த பின்கதவை மூடியாகிவிட்டதே!

சுற்றுலா செல்வதை
சுற்றி உள்ளவர்களுக்கெல்லாம்
பெறுமையோடு சொல்லி
வயிற்றெரிச்சலைக் கிளப்பி

வீடு வந்து மறக்காமல்
சாவி எடுத்து பையில்
பத்திரமாய்ப் போட்டு
பதட்டமே இல்லாமல் கிளம்பி வந்தோமே!

ஆகா!! வீட்டைப் பூட்டினோமா?????

சுற்றுலா தொடங்கிய
முதல் நாளே என்
தலை சுற்றத் தொடங்கி விட்டது.

1 comment:

அன்புடன் அருணா said...

ரொம்ப யதார்த்தமான கவிதை...நன்றாக இருந்தது.
அன்புடன் அருணா